பாரம்பரிய இசையை அடுத்த தலைமுறைக்கு சேர்க்க வேண்டும்!
இந்தியாவிலேயே தலைசிறந்த கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., சென்னையின் இயக்குனர் காமகோடி: கும்பகோணம் பக்கத்துல, விஷ்ணுபுரம் தான் சொந்த ஊர். தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம்னாலே கர்நாடக சங்கீதம் தானே. அப்பா, மிகப்பெரிய சமஸ்கிருத புரொபசர். எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவுக்கு சமஸ்கிருத ஸ்லோகங்கள் பாடும்போது, அதன் சரியான உச்சரிப்புக்கு பல, 'கைடன்ஸ்' கொடுத்தார் அப்பா. அப்படித்தான் கர்நாடக சங்கீதம் எனக்கு அறிமுகமானது. சங்கீத உலகில் மிகப் பெரிய ஜாம்பவானாக விளங்கிய செம்மங்குடி ஸ்ரீனிவாசய்யர் எங்களுக்கு உறவு. அதனால், சிறு வயதிலேயே வயலின் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.கிட்டத்தட்ட, 250 கீர்த்தனைகளுக்கு மேல் எனக்கு பாடம் உண்டு. தற்போது, பயிற்சி செய்வதற்கு நேரமில்லை. ஆனால், என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக எப்போதும் இசை இருந்திருக்கிறது.இசையை பாடத் திட்டத்தில் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். 'கல்ச்சர் கோட்டா' வாயிலாக நம் கலாசார அடிப்படையில், 'சீட்' தரப்படும் போது, குழந்தைகள் படிப்பை மட்டுமல்லாமல், இசையையும் தொடர்ந்து கற்றுக் கொள்வர். அதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம்.தற்போது கூட கலாஷேத்ராவில் இருந்து, 'ஒர்க் ஷாப்ஸ்' நடத்துகின்றனர்; அது, மாணவர்களின் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக் கொள்வதற்கான முயற்சி தான். அது மட்டுமல்லாமல், கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம், மோகினி ஆட்டம், பரதநாட்டியம் போன்ற நம் கலாசாரத்தை அடிப்படையாக கொண்ட நிகழ்ச்சிகளை, மாணவர்களுக்காக ஏற்பாடு செய்து, வெற்றிகரமாக நடத்துகிறோம்.'ஸ்போர்ட்ஸ் கோட்டா'வுக்கான தகுதியை நிர்ணயம் செய்வதற்கு எப்படி அளவுகோல் உருவானதோ, அதேபோன்று கலாசாரத்தின் அடிப்படையில், 'கல்ச்சர் கோட்டா' கொண்டு வரும் போது, அதற்கும் தகுதிகள் உருவாக்கப்படும்.உதாரணத்துக்கு, ஆல் இண்டியா ரேடியோவில் இசைக்கான கிரேடுகள் உண்டு. அந்த கிரேடுகளுக்கு தேர்வு வைத்து தான் எடுப்பர். அதே செயல்முறையை இதற்கும் பயன்படுத்தலாம்.இசையை பாடமாக கொண்டு வரும் பட்சத்தில், மற்ற வழக்கமான பாடங்களை போல் எங்களுடைய பேராசிரியர்கள் தான் வகுப்புகள் நடத்துவர். அதை தாண்டி மிகப்பெரிய விற்பன்னர்களும் அவ்வப்போது அழைக்கப்பட்டு, பயிற்சிகள் கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும். அத்தனை செலவுகளையும் ஐ.ஐ.டி.,யே பார்த்துக் கொள்ளும்.பாரம்பரிய இசையை அடுத்தடுத்த தலைமுறைக்கு அப்படியே கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பது தான், இந்த முயற்சியின் முக்கிய நோக்கம்.