உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / நமக்கு படிப்பு தான் சொத்து!

நமக்கு படிப்பு தான் சொத்து!

சென்னை பல்லாவரத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகத்துக்கு வெளியே, 'கீர்த்தனா பாஸ்ட் புட்' என்ற கடையை நடத்தி வரும் சரளா: இந்த பகுதியில், 'அக்கா கடை' என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. எனக்கு சொந்த ஊர் பல்லாவரம் தான் . காதல் திருமணம் செய்ததால், வீட்டில் சில ஆண்டுகளாக பேசாமல் இருந்தனர். குழந்தைகள் சிறிய வர்களாக இருக்கும் போதே, கணவர் மாரடைப்பால் இறந்து விட்டார். குடும்ப பொறுப்பு ஒரு பக்கம்; குழந்தை வளர்ப்பு இன்னொரு பக்கம் என திண்டாடினேன். என் குடும்ப சூழலை மாற்ற, எனக்கு இருந்த ஒரே ஆயுதம் உழைப்பு மட்டுமே. அதுதான் என்னை யும், என் பிள்ளைகளையும் தலைநிமிர செய்திருக்கிறது. விடியற்காலை எழுந்து, வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, 9:00 மணிக்கு, சமையலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு கடைக்கு வருவேன். என் வாடிக்கையாளர்கள் கல்லுாரி மாணவ - மாணவியர் தான். 'பணம் கொடுத்தால் தான் சாப்பாடு' என்று கெடுபிடி காட்டுவதில்லை . 'பிள்ளைகள் வயிறு நிறைந்தால் போதும்' என்றுதான் நினைப்பேன். சில மாணவர்கள் குறிப்பிட்ட ஒரு மெனுவை சொல்லி, 'செய்து தாங்க அக்கா' என கேட்பாங்க. என் பிள்ளைகளுக்கு செய்கிற மாதிரி, அவர்களுக்கு செய்து தருவேன். என் கடையில் சாப்பிடுபவர்களின் முகத்தில் சந்தோஷத்தை பார்ப்பது மட்டும் தான் என் ஆசை. இத்தனை ஆண்டு களில் அந்த மனநிறைவு எனக்கு தினமும் கிடைக்கிறது. மதியம், இரவு என இரண்டு நேர உணவு களை தனி ஆளாக சமைத்து, விற்பனை செய்து வருகிறேன். காலை, 9:00 முதல், இரவு 9:00 மணி வரை வேலை இருக்கும். மசாலா அரைப்பது, சமைப்பது, பரிமாறுவது, பாத்திரம் கழுவுவது எல்லாமே நான் தான். வேலைக்கு ஆள் போட்டால், அவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும். கிடைக்கிற வருமானமே கொஞ்சம் தான். அதனால், உடல்நிலை குறித்து எல்லாம் யோசிப்பது இல்லை. மூன்று பிள்ளைகளையும் படிக்க வைக்கிற வைராக்கியத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறேன். என் கையில் காசு, பணம் இல்லாமல் இருக்கலாம்... ஆனால், என் பிள்ளைகளுக்கு படிப்பு என்ற சொத்தை உருவாக்கி தருவதற்கு மனதிலும், உடலிலும் தெம்பு இருக்கு... நமக்கெல்லாம் படிப்புதானே சொத்து!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
நவ 04, 2025 11:11

கீர்த்தனா பாஸ்ட் புட் கடையை நடத்தி வரும் சரளா அவர்களுக்கு பாராட்டுக்கள். தனி மனுஷியாக கடுமையாக உழைத்து மூன்று பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறீர்கள். உழைப்பே உயர்வு என்ற வாக்கினை மறக்காமல் உழைக்கும் நீங்கள் நிச்சயமாக ஒரு நாள் வாழ்க்கையில் மேலும் மேலும் உயர்வீர்கள். அவ்வாறு உயர இந்த தினமலர் வாசகனின் வாழ்த்துக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை