மேலும் செய்திகள்
சீமானுக்கு எத்தனை நாக்குகள்?
14-Oct-2025
மின் விபத்தில் இரு கைகளை இழந்தாலும், வாயால் ஓவியம் வரைந்து அசத்தும், உத்தர பிரதேச மாநிலம், அலஹாபாதைச் சேர்ந்த, 34 வயதான சரிதா திவேதி: சரிதா என்ற என் பெயருக்கு, 'ஆறு' என்று அர்த்தம். ஆறு போலத்தான் நானும் ஓடி விளையாடி கொண்டிருந்தேன். 1995, ஆகஸ்ட் 10---ம் தேதி, என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது அந்த விபத்து. அப்போது எனக்கு வயது, 4. எங்கள் மாமா வீட்டு மொட்டை மாடியில் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தேன். 11,000 வோல்ட் மின் கம்பி ஒன்று திடீரென அறுந்து, என் மேல் விழுந்தது. இதனால், என் நிலை கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மோசமானது. உயிர் பிழைத்தேன் என்றாலும் கூட, விதி வேறுவிதமாக விளையாடியது. இரண்டு கைகள் மற்றும் வலது காலில் பாதியை அந்த கொடூர விபத்தில் இழந்தேன். ஆனாலும், மனதை திடப்படுத்திக் கொண்டேன். என் பெற்றோர், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியில் என்னை சேர்க்கவில்லை. ஆரோக்கியமாக உள்ள மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து படித்தேன். அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் நுண்கலை பிரிவில் பட்டம் பெற்றேன். தற்போது, செயற்கை கால் உதவியோடு நடக்கிறேன். அன்றாட வேலைகளை நானே செய்து கொள்ளும் அளவுக்கு சுயசார்புடன் இருக்கிறேன். என் வாயும், இடதுகாலும் எனக்கு உதவுகின்றன; ஆம்... எழுத, சாப்பிட, வரைய, சமைக்க என எல்லா செயல்களையும் என்னால் சுயமாக செய்ய முடியும். 'அலிம்கோ' எனும் இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகத்தின், 'பிராண்ட் அம்பாசிடர்' ஆகவும் பணிபுரிகிறேன். அந்த நிறுவனத்தின் தோட்டக்கலைத் துறை மேலாண்மை பொறுப்பையும் வகிக்கிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்கிறேன். தினசரி புதிதாக பல விஷயங்களை கற்று வருகிறேன். மறைந்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் இருந்து, 'பாலஸ்ரீ புரஸ்கார்' விருதை 2005ல் பெற்றபோது, எனக்குள் இருக்கும் ஓவிய திறமையை உணர்ந்தேன். தற்போது, வாயால் துாரிகையை கவ்வி, அற்புதமான ஓவியங்கள் வரைகிறேன். இந்த முயற்சிக்கு பல பரிசுகள், விருதுகள் கிடைத்துள்ளன. என் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை, மத்திய அரசின் கல்வி துறை வெளியிட்டுள்ள, ஆறாம் வகுப்பு ஹிந்தி புத்தகத்தில் ஒரு பாடமாக சேர்த்திருக்கின்றனர். என் திறமைகள் வாயிலாக உடல் குறையை வெற்றி கொள்கிறேன். ஓவியம் வரைவதோடு, தையல், கைவினை பொருட்கள் தயாரித்தல், 'மாடலிங்' உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் காட்டுகிறேன். உடல் ரீதியாக குறைபாடுள்ளவர் என்றால், எதுவும் செய்ய முடியாது என்று அர்த்தம் இல்லை; இயலாமை என்பது ஒரு மனநிலை மட்டுமே! தோல்வியை பாடமாக எடுத்து அடுத்த முயற்சியில் இறங்க வேண்டும்!பல தொழில்களை செய்து சம்பாதிக்கும், சிவகங்கை மாவட்டம், கண்டனுாரைச் சேர்ந்த நாகராஜ்:'இன்ஜினியரிங் டிப்ளமா' படித்து முடித்ததும், ஒரு கம்பெனியில் இரு மாதங்கள் வேலை பார்த்தேன்; நல்ல சம்பளம் தான். ஆனாலும், சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்று ஆசை. நான் படிக்கும்போதே சின்னதாக ஒரு போட்டோ ஸ்டூடியோ ஆரம்பித்தேன். அடுத்ததாக, சின்ன சின்ன பரிசுப் பொருட்கள் செய்து விற்பனை செய்தேன்.இந்த சிறிய முயற்சி தந்த அனுபவம் தான் நம்பிக்கையாக மாற ஆரம்பித்தது. உடனே வேலையை விட்டு விட்டு, 50,000 ரூபாய் முதலீட்டில், 'யுனிக் மேட்' என்ற பெயரில் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை ஆரம்பித்தேன். வழக்கமான பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையாக இல்லாமல், வித்தியாசமாக செய்ய நினைத்தேன்.வாடிக்கையாளர்கள் விரும்புகிற மாதிரி பரிசு பொருட்களை தயார் செய்து, 24 மணி நேரத்திற்குள், 'டெலிவரி' கொடுத்து விடுவேன்; அதுதான் என் வெற்றிக்கு அடித்தளம்.ஆயினும், பரிசு பொருட்கள் செய்ய தேவையான மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. காரைக்குடியில், இந்த தொழிலுக்கு தேவையான பொருட்களும் முறையாக கிடைக்கவில்லை. வெளியூர்களுக்கு சென்று தான் பொருட்கள் வாங்கி வருவேன். இப்படி சிரமப்பட்டு, நான் செய்யும் பரிசு பொருட்கள் புதுமையாகவும், வித்தியாசமாகவும் இருப்பதால், பலர் என் கடையை தேடி வர ஆரம்பித்தனர்.அடுத்ததாக, 'பிரேம் மேக்கர்ஸ்' என்ற பெயரில் புகைப்படங்களுக்கு பிரேம் போடும் கடையைத் துவங்கினேன். மலிவான விலையில், தரமாக, புகைப்படங்களை பிரேம் போட்டு கொடுத்ததால், வரவேற்பு கிடைத்தது. இன்று, என்னிடம் 20 பேருக்கு மேல் வேலை செய்கின்றனர்.திருமணம், பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் தொழிலையும் துவங்கி இருக்கிறேன். 50,000 ரூபாயில் தொடங்கிய இந்த தொழிலில், சராசரியாக மாதம், 5 லட்சம் வரைக்கும், 'டர்ன் ஓவர்' ஆகிறது.சென்னையிலும் ஒரு கிளையை துவங்கி நடத்தி வருகிறேன். நாம் ஒரு விஷயத்தை துவங்க நினைத்தால், திட்டமிட்டு இறங்க வேண்டும். அப்படி முடிவெடுத்த பின், 'அது சரியாக வருமா, தவறாக மாறிவிடுமா' என்று யோசிக்காமல், அந்த விஷயத்தை தொடர்ந்து செய்ய வேண்டும்.நாம் தொடங்கிய விஷயத்தில் வெற்றி கிடைத்து விட்டால் மகிழ்ச்சி; தோல்வி வந்துவிட்டால், அதை ஒரு பாடமாக எடுத்து, அடுத்த முயற்சியை நோக்கி முன்னேற வேண்டும்!
14-Oct-2025