சிறப்பு உணவுகள் எதையும் உண்பதில்லை!-
'பாக்சிங்' என்ற குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று, பதக்கங்களை குவித்து வரும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, திருவெள்ளைவாயல் கிராமத்தைச் சேர்ந்த குணஸ்ரீ: அப்பா இரும்பு பட்டறையில், 'வெல்டராக' பணிபுரிகிறார்; அம்மா இல்லத்தரசி.அப்பா கராத்தே வீரராக இருந்தும், அதில் ஈடுபடும் எண்ணம் எனக்கு வரவில்லை. ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, பாக்சிங் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை பெற்றோரிடம் கூறினேன். அவர்களும் மறுக்காமல், என்னை பயிற்சியில் சேர்த்து விட்டனர்.பாக்சிங் கோச் பாபு என்பவரிடம் பயிற்சி பெற்று வருகிறேன். அவர் நிறைய, 'டெக்னிக்'குகளை சொல்லிக் கொடுக்கிறார். எட்டாம் வகுப்பில் இருந்து, தற்போது வரை தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். தோல்விகளின் போது, 'ஏன், எதற்காக, எப்படி தோற்றோம்' என்ற படிப்பினைகள் பலவற்றையும் கற்றுக் கொள்வேன். வெற்றி பெறும் போது, 'இன்னும் கூட நன்றாக செய்திருக்கலாம்' என, நினைத்துக் கொள்வேன்.மாவட்ட, மாநில, தேசிய அளவில் பங்கேற்று, மூன்றாண்டுகளில், தலா, முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் என பல பதக்கங்கள் பெற்றுள்ளேன். 13 வயதில் துவங்கிய என் பதக்க வேட்டை தொடர்கிறது.தற்போது வரை, 30 தங்கப் பதக்கம் பெற்றுள்ளேன். தவிர வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் நிறைய பெற்றுள்ளேன். குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்கு, உடலில் வலு அதிகம் தேவை. ஆனால் அதற்கான விசேஷ உணவுகள் எதையும் எடுத்துக் கொண்டதில்லை. சாதாரணமாக வீட்டில் சாப்பிடும் உணவு தான் எடுத்துக் கொள்கிறேன்.தினசரி காலையில் நிலக்கடலையும், ஊற வைத்த பாதாமும் எடுத்துக் கொள்வேன். போட்டிகளில் பங்கேற்கும் போது, என் மனதை வலுவாக வைத்து கொள்வேன்.தேசிய அளவில், பெண்களுக்கான பாக்சிங் போட்டிகள் கடந்த டிசம்பரில் டில்லியில் நடைபெற்றன. அதில், மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றேன். 2022ல், தேசிய அளவில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தேன். ஆசிய அளவில், சர்வதேச அளவில் பெண்கள் குத்துச்சண்டை போட்டிகளில் நான் பங்கேற்க வேண்டும். அதன் பின், ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி, அதிலும் பதக்கம் பெறுவதே என் எதிர்கால லட்சியம்!தொடர்புக்கு: 89395 94236