உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / ‘குணச்சித்திர வேடங்களை குறி வைக்கிறேன்!’

‘குணச்சித்திர வேடங்களை குறி வைக்கிறேன்!’

‘டிவி’ நிகழ்ச்சிகளில் தொடங்கி, இன்று திரைத்துறையில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வரும் சென்னையைச் சேர்ந்த தங்கதுரை: எப்போது, எப்படி துவங்கியது என்று நினைவில் இல்லை. ஆனால், சுற்றி இருப்போர் மத்தியில், ‘காமெடி’ செய்யும் ஒரு ஆளாக நான் இருந்தது, நன்கு நினைவில் இருக்கிறது. பள்ளி பருவத்தில், படிப்புக்கும், வீட்டு தேவைக்கும் பகுதிநேர வேலைகளுக்கு சென்றேன். எப்போதும் என்னை சுற்றி ஒரு கூட்டம் இருந்தபடியே இருக்கும். சென்னை மயிலாப்பூர் விவேகானந்தா கல்லுாரியில் படித்தபோது, நான் ஒரு போட்டிக்கு சென்றால், ‘சப்போர்ட்’ பண்ண ஒரு கூட்டமே வரும். ‘கேட்டரிங்’ தொழிலில் இருந்த ஒரு அண்ணன் வாயிலாகத் தான், விஜய் ‘டிவி’யின், ‘கலக்கப் போவது யாரு’ என்ற நிகழ்ச்சிக்கான தேர்வுக்கு சென்றேன். அந்த நிகழ்ச்சி வெளியானது வரை எனக்கு புகழும், பணமும் கிடைத்தது. அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. அடுத்து அதே டிவியில், ‘அது இது எது’ என்ற நிகழ்ச்சி வாயிலாக மீண்டும் அறிமுகமானேன். குழுவாக இருந்ததால் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, ‘கன்டென்ட்’ உருவாக்குவோம். தமாசு புத்தகங்கள் நிறைய வாங்கி படித்துப் பார்த்து, அவற்றில் இருந்து சில தமாசுகளை கூறுவேன். அப்படி சொல்லும்போது, ‘செல்லாது செல்லாது... இது பழைய ஜோக்’ என்று ராமர் என்ற நகைச்சுவை நடிகர் கலாய்ப்பார். அப்படியே, ‘பழைய ஜோக்’ என்ற பட்டம், என் பெயருக்கு முன் ஒட்டிக் கொண்டது. நான் வாங்கிய தமாசு புத்தகங்களை, ராமரும் முன்னாடியே வாங்கி படிச்சிருக்காருன்னு அதன்பின் தெரிந்து கொண்டேன். இதனால், மொக்க ஜோக்காகவும் இருந்தாலும் பரவாயில்லை; அது சொந்தமாக இருக்கணும் என்று குழுவாக உட்கார்ந்து யோசித்தோம். அதற்கு சிறிது பலன் கிடைத்தது. பாட்ஷா படத்தில், ‘நாடி, நரம்பு, ரத்தம், சதைன்னு அத்தனையிலும்’னு ஒரு, ‘பஞ்ச் டயலாக்’ வருமே... அதேபோன்று சிரிப்பு குறித்த சிந்தனை தான் எந்நேரமும் இருந்தது. அப்படி நான் உருவாக்கிய ஜோக்குகளை வைத்து, ‘தங்கதுரையின் தற்கொலை ஜோக்குகள், தங்கதுரையின் தக்லைப் ஜோக்குகள்’ என்று இரண்டு புத்தகங்கள் வந்து விட்டன. இரண்டுமே, 25 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகின. நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டுமெனில், முதல் நாள் முழுக்க உட்கார்ந்து யோசித்த காலம் போய், ‘அங்க போய் பார்த்துக்கலாம்’ என்ற அளவுக்கு முன்னேறி இருக்கிறேன். மக்களை சிரிக்க வைக்கணும் என்பதை தீவிரமாக எடுத்துக் கொண்டால், நிச்சயம் வயிறு வலிக்க அவர்களை சிரிக்க வைக்க முடியும் என்று நம்புகிறேன். தமாசு தான் எனக்கு சினிமா வாய்ப்பையும் தந்தது. கடவுள் ஆசியுடன் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. குணச்சித்திர வேடங்கள் தான் எனக்கு ஏற்றவை என்று தோன்றுவதால், அதை நோக்கியே பயணிக்கலாம் என்று இருக்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை