உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / உழைப்பால் உயர்ந்தேன்!

உழைப்பால் உயர்ந்தேன்!

வறுமையான குடும்ப சூழலில், மூட்டை துாக்கிப் பிழைத்து, அதன்பின் சொந்தமாக தொழில் துவங்கி, பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வரும், மணிப்பூரில் இருக்கும் பாருங் என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்த யாங்மிலா ஜிமிக்:திருமணமாகி, கணவர் கைவிட்ட நிலையில் வயதான தந்தையையும், கைக்குழந்தையையும் காப்பாற்றியாக வேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. அப்போது என் வயது 21.பிழைக்க வழி இல்லாததால், காய்கறிகளை விற்கும் வேலையை ஆரம்பித்தேன். தினமும் அதிகாலையில் எழுந்து 7 கி.மீ., துாரம் நடந்து சென்று உக்ருல் என்ற நகரத்தை அடைவேன். முதுகில் சுமந்து செல்லும் மூட்டையில் காய்கறிகள் நிரம்பியிருக்கும். அவற்றை விற்று மீண்டும் அதே துாரத்தை நடந்து வருவேன். மதிய உணவுக்குப் பின் மீண்டும் காய்கறிகள் விற்பனையை துவங்குவேன். அதன்பின் பழைய துணிகளை விற்க ஆரம்பித்தேன். பின் கோழிப்பண்ணை பணிகளிலும் ஈடுட்டேன். 2016ல் அரசு சாரா நிறுவனம் ஒன்று அளித்த பயிற்சியில் சேர்ந்து, உணவு பதப்படுத்தும் நுணுக்கங்களை கற்றுக்கொண்ட பின்தான், என் வாழ்க்கைத்தரம் மெல்ல மெல்ல உயரத் துவங்கியது. அதன்பின் சொந்தமாக உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டேன்.முதலில், 500 ரூபாய் முதலீட்டில் மிட்டாய்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தினேன். அதன்பின் பழ வகைகளில் இருந்து இனிப்புகள் தயாரித்தேன். அவற்றை உள்ளூர் மக்கள் விரும்பி வாங்கினர். அதன்பின் ஊறுகாய்கள் தயாரிக்கும் முறைகளை கற்று, தயாரித்து விற்க ஆரம்பித்தேன். என் தயாரிப்புகளுக்கு ஷிரின் புராடக்ட்ஸ் என்று பெயர் சூட்டினேன். ஷிரின் என்ற திபெத்--பர்மிய சொல்லுக்கு, ஏழை - பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் செழிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். உக்ருல் நகரின் வியூலேண்ட் என்ற பகுதியில் ஓரிடத்தை வாடகைக்கு பிடித்து அங்கு என் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்தேன். தற்போது மணிப்பூர் தலைநகரமான இம்பால், அசாம், நாகாலாந்து மற்றும் புதுடில்லி வரை விற்கப்படுகின்றன. இணையதளம் வாயிலாக ஆர்டர்கள் பெறப்பட்டு, விற்பனையாகின்றன.என் தொழிலை மிகவும் எளிமையாகத்தான் ஆரம்பித்தேன். முதலில் வீடு வீடாக சென்று நான் மட்டுமே விற்றேன். தற்போது ஆறு நிரந்தர பணியாளர்களும், ஆறு தற்காலிக பணியாளர்களும் என்னிடம் பணிபுரிகின்றனர். என் மகன் ஷாங்ரெய்பாவோ எம்.எஸ்.சி., பட்டதாரி. என் தொழிலுக்கு மகனும் உதவுகிறான். என் தொழிலை மேலும் விரிவுபடுத்தி, பல பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தர வேண்டுமென்பதற்காகவே கடுமையாக உழைக்கிறேன்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை