உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / என்னை போல பல சாம்பியன்களை உருவாக்குவேன்!

என்னை போல பல சாம்பியன்களை உருவாக்குவேன்!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த ஆறா-வது உலக கோப்பை கேரம் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற, சென்னை காசிமேடைச் சேர்ந்த, 17 வயதான காசிமாவின் தந்தையான முகமது பாட்ஷா: காசிமேடு கடற்கரைக்கு அருகில், 'செரின் நகர் கேரம் பயிற்சி மையம்' நடத்தி வருகிறேன். என் அப்பா நல்லா கேரம் விளையாடுவார்; அவரிடமிருந்து தான் நானும் கற்றுக் கொண்டேன். அப்போதே, மாவட்டம் வரையிலான போட்டிகளில் ஜெயித்திருக்கிறேன். ஆனால், எங்கள் குடும்பமே பிளாட்பார கடையை நம்பி இருந்ததால், அதுக்கு மேல் போக முடியவில்லை.அதனால், என் பசங்களை நல்லா படிக்க வைக்க முடிவு செய்தேன். என் பையன், என்னிடம் இருந்து தான் கேரம் கற்றுக் கொண்டான்.நாக்பூரில் நடந்த ஜூனியர் லெவல் தேசிய போட்டியில் சாம்பியன் ஆனான். அப்போது, என் மகள் காசிமாவுக்கு வயது 7. அண்ணனை பார்த்து அவளும் கேரம் ஆட ஆரம்பித்தாள். சிறு வயதிலிருந்து என் மகளின் கேரம் பயிற்சியாளர் நான் தான். என் பயிற்சி மையம் வாயிலாக, 14 மாணவர்களை மாநில அளவிலான சாம்பியன் பட்டம் வாங்க வைத்தது.தொடர்ந்து, 56 மணி நேரம் கேரம் விளையாட வைத்து, ஒரு மாணவரை கின்னஸ் சாதனை புரிய வைத்தது என்ற என் சாதனை பட்டறையில், தற்போது என் மகள் உலக சாம்பியன் மகுடம் சூடியிருக்கிறாள்.எங்களுக்கு பணம் தான் பெரிய பிரச்னையா இருந்தது. காசிமா சிறு வயதிலேயே சீனியர் கேட்டகரியில் விளையாட ஆரம்பித்து விட்டாள். அவளது வளர்ச்சி, 'டக் டக்'கென நடந்தது. அர்ஜுனா விருது வாங்கிய மரிய இருதயம் சார் தான், கடந்த இரண்டு ஆண்டுகளாக காசிமாவுக்கு, 'கோச்சிங்' கொடுத்தார். அதற்கு பின், பல தேசிய போட்டிகளில் அவள் ஜெயிக்க ஆரம்பித்தாள்.அவளது ரேங்க் உயர்ந்து, உலக கோப்பை விளையாட வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்று, என் மகள் சாம்பியன் ஆகியிருக்கிறாள். அதுவும், மூன்று முறை உலக சாம்பியன், 12 முறை தேசிய சாம்பியன் பட்டம் ஜெயித்த ஒருவரை தோற்கடித்து ஜெயித்துள்ளாள் என்றால், இதைவிட வேற என்ன வேணும்? மகள் காசிமா: சாதாரண ஆட்டோ ஓட்டுநரின் மகளாக அரசு பள்ளியில் படித்து, கிடைத்த சின்ன சின்ன வாய்ப்புகளையும் விடாமல் தடம் பதித்தேன். உலகக் கோப்பையின் மகளிர் தனி நபர், இரட்டையர் மற்றும் குழு பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை பெற்று, தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்துஉள்ளேன்.நான் கோப்பையை வாங்கிய தருணத்தில், கண்ணீருடன் பேசிய வார்த்தைகள்... 'இந்த வெற்றிக்கு காரணம் என் அப்பா' என்பதே! வருங்காலத்தில் செரின் நகர் பயிற்சி மையத்தை மேம்படுத்தி, என்னை போல பல சாம்பியன்களை உருவாக்குவேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை