கடைசி நிமிடம் வரை சமூகத்திற்காக வாழ்வேன்!
எச்.ஐ.வி., பாதிப்பில் இருந்து மீண்டு, எச்.ஐ.வி., பாதித்தோர் நலனுக்காக. எஸ்.ஐ.பி., என்ற காப்பகத்தை நடத்தி வரும், திருநங்கை நுாரி: என் பூர்வீகம் ராமநாதபுரம். 13 வயதிலேயே பெற்றோரை இழந்து விட்டேன். உடம்பில் நடந்த ஹார்மோன் மாற்றங்களை புரிந்துகொள்ள முடியாத வயது. சாப்பாட்டுக்கே வழியில்லை. திருநங்கை கூட்டத்துடன் சேர்ந்து மும்பைக்கு சென்று விட்டேன். 18 வயதில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டேன்.அந்த நேரத்தில், ஒரு ஆர்மி மேன் என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். என்னை பற்றி தெரிந்தும், முடிவில் உறுதியாக இருந்தார். திருமணம் செய்து கொண்டோம். அவர் வீட்டில் எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை; குடும்பத்தைப் பிரிந்து, என்னுடன் வந்தார்.அதுவரை கிடைக்காத பாசமும், அன்பும் கிடைத்து வாழ ஆரம்பித்தேன். ஆனால், எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் இறந்து விட்டார். அதன்பின் சென்னைக்கு வந்து விட்டேன். 1987ல் எச்.ஐ.வி., குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை அரசு துவங்கியது. பாலியல் தொழிலில் இருந்ததால், நானும் பரிசோதனை செய்ததில், 'பாசிட்டிவ்' என வந்தது.சாகப் போகிறோம் என, ஆரம்பத்தில் நடுக்கமாக இருந்தது. அதன்பின், பாலியல் தொழிலில் இருந்து முழுமையாக விலகி, வேலை செய்து சம்பாதிக்க ஆரம்பித்தேன். என்னை போல் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோரை பாதுகாக்கும் பொறுப்பை, கடமையாக எடுத்து செய்ய ஆரம்பித்தேன். அப்போது என் தோழியர் மூவர், பாதிப்பின் தாக்கம் அதிகமாகி, சில ஆண்டுகளில் அவர்கள் இறந்து விட்டனர். அவர்களின் நினைவாக, எஸ்.ஐ.பி., என்று ஒரு காப்பகத்தை துவங்கி, 2003-ல் பதிவு செய்தேன்; பலரும் உதவிக்கரம் நீட்டினர்.எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அரசால் அனுப்பி வைக்கப்பட்ட, 69 பெண் குழந்தைகளும், 16 ஆண் குழந்தைகளும் எங்கள் காப்பகத்தில் வளர்ந்து வெளியே சென்று இருக்கின்றனர். இவர்களில் பலர், தன்னை போல் பாதிப்புள்ள மற்றொருவரை திருமணம் செய்து, உரிய மருத்துவ ஆலோசனைகளை பெற்று, எச்.ஐ.வி., இல்லாத குழந்தைகளை பெற்றெடுப்பர். தற்போது இந்த காப்பகத்தில் எச்.ஐ.வி., இல்லாத குழந்தைகள், 50 பேர் உள்ளனர். 'எனக்கு பாதிப்பு வந்து, 38 ஆண்டுகள் ஆகின்றன. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். மருந்து, மாத்திரை எடுத்துக்கொண்டால், ஆரோக்கியமாக இருக்கலாம்' என்று கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.தற்போது எனக்கு, 75 வயது ஆகிறது. 'எச்.ஐ.வி., பாதிப்பாளர்' என்ற என் அடையாளத்தை, 'எச்.ஐ.வி., ஒழிப்புக்கான போராளி' என்று மாற்றி இருக்கிறேன்.இந்த நிமிடம் வரை குழந்தைகளின் சாப்பாடு, படிப்பு, உடை, மருத்துவம் என ஓடிக் கொண்டே இருக்கிறேன். உயிர் இருக்கும் கடைசி நிமிடம் வரை சமூகத்திற்காகவே வாழ்வேன்.