முன்னேறணும்னா நாம்தான் இறங்கி வேலை பார்க்கணும்!
சென்னை மயிலாப்பூரில் சிறிய அளவில் புடவை கடை நடத்தும், ஐ.டி., நிறுவன முன்னாள் ஊழியரான வித்யா: பிரபல ஐ.டி., நிறுவனங்களில், 'பிசினஸ் ஆப்பரேஷன் டீம்' தலைமை பொறுப்பில் வேலை பார்த்தேன். 2023ம் ஆண்டு, ஆள்குறைப்பில் வேலை போய் விட்டது. அந்த நேரம், என் அம்மாவும் புற்றுநோயுடன் போராடி இறந்து விட்டார். இந்த இரண்டில் இருந்தும் மீண்டு வர, என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தேன். பெங்களூரில் இருந்த துாரத்து உறவினர் ஒருவர் வாயிலாக, பிரின்ட் புடவை தொழிலுக்குள் வந்தேன். முன்னதாக, சென்னையில் இருக்கும் பெரிய கடைகள் துவங்கி, சிறிய கடைகள் அனைத்திலும் ஏறி, இறங்கி புடவைகளோட விலை, டிசைன், தரம் எல்லாத்தையும் விற்பனையாளர் மனநிலைக்கு மாறி புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். இணையதளத்தில் பல விஷயங்களை தேடித் தேடி படித்தேன். இந்த அடிப்படையை தெரிந்துகொள்ள ஆறு மாதங்கள் ஆகின. காஞ்சிபுரம் பட்டு, சில்க் காட்டன், மங்களகிரி சில்க் உள்ளிட்ட புடவைகளை வாங்கி பிரின்ட் பண்ணினேன். ஆழ்வார்பேட்டையில் சின்ன அறையை வாடகைக்கு எடுத்து, முதல் கண்காட்சி விற்பனையை துவங்கினேன். 20 புடவைகளுக்கு மேல் விற்பனை ஆனது. அதுவே, என் பிசினஸ் மாடலாக மாறியது. ஆறு மாதங்களில், 250 வாடிக்கையாளர்கள் சேர்ந்தனர். மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி, கோவை என, 10 - 15 உற்பத்தியாளர்களிடம் இருந்து புடவை களை வாங்கி பிரின்ட் செய்கிறேன். ஒரு நாள் என் கணவர் தான், 'சின்னதா ஒரு புடவை கடை துவங்கலாம்' என்று சொன்னார். அப்படித் தான் சில மாதங்களுக்கு முன், இந்த கடையை துவங்கினேன். கடையை கூட்டி பெருக்குவதில் இருந்து மார்க்கெட்டிங், சேல்ஸ், அக்கவுன்ட்ஸ் பார்க்கிறதுன்னு எல்லாமே நான்தான். இது தவிர, 2024 செப்டம்பரில் இருந்து, கண்காட்சி விற்பனையும் நடத்திட்டு இருக்கேன். இதுவரை, 8 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' ஆகியிருக்கு. உள்ளூர் நியூஸ் பேப்பரில் வந்த விளம்பரத்தால், வாடிக்கையாளர்கள் என் கடையை தேடி வர ஆரம்பித்தனர். இந்த பகுதி முழுக்க சுற்றி, துண்டு பிரசுரங்கள் கொடுத்து, மக்களிடம் பேசி கடைக்கு அழைத்தேன். இந்த மாதிரியான வேலைகள் செய்றதுக்கு யோசிக்க மாட்டேன். நாம முன்னேறணும்னா, நாமதான் இறங்கி வேலை பார்க்கணும். எந்த, 'மேஜிக்'கும் நடக்காது. எந்த தொழிலையும் குறைவான முதலீட்டில் துவங்குங்க. ஆமை வேகத்தில், சின்ன சின்ன அடியா எடுத்து வைங்க. வெற்றி கிடைத்தாலும், அடுத்த அடியை கணக்கு பண்ணி எடுத்து வைங்க.