உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / சிறுதானியங்களில் ஸ்நாக்ஸ் தயாரிக்கிறேன்!

சிறுதானியங்களில் ஸ்நாக்ஸ் தயாரிக்கிறேன்!

கடந்த, 17 ஆண்டுகளாக, சிறுதானியத்தில் தின்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்து வரும், ஸ்ரீவில்லிபுத்துாரைச் சேர்ந்த உமா கண்ணன்: நான் பிறந்து வளர்ந்தது, துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம். விவசாய குடும்பம் என்பதால், சிறு வயது முதலே சிறுதானிய உணவுகளை சாப்பிட்டு பழகியதால், அவை விருப்ப உணவாகி விட்டன. திருமணத்திற்கு பிறகும் அவற்றை அதிகம் சமைக்க ஆரம்பித்தேன். நம் குழந்தைகளுக்கு கொடுப்பது போல, மற்ற குழந்தைகளுக்கும் சிறுதானிய தின்பண்டங்கள் கொடுத்தால், இதுகுறித்த விழிப்புணர்வை குழந்தைகள் வாயிலாக அவர்கள் குடும்பத்துக்கும் கொண்டு சேர்க்கலாமே என்று யோசித்து, அதையே பிசினசாகவும் செய்ய முடிவெடுத்தேன். கணவரிடம் கேட்ட போது, 'எந்த காரணத்திற்காகவும் உணவுகளின் தரத்தில் சமரசம் கூடாது. மற்ற குழந்தைகள் சாப்பிடுவதை நானும், நம் குழந்தைகளும் சாப்பிடுவோம்' என்றார். என் சமையலறையில் இருந்த இட்லி பாத்திரத்துடன், 2008ல் ஆரம்பித்தது தான், 'டோரா ஸ்நாக்ஸ்!' 'ஆவியில் வேக வைத்த சிறுதானிய உணவுகளை சுகாதாரமாக தயாரிக்கிறோம்' என்று விளம்பரப்படுத்தி, ஸ்ரீவில்லிபுத்துாரில் எங்கள் வீட்டின் கார் ஷெட்டில் வைத்து தான் விற்பனை செய்தேன். முதல் நாளே, எதிர்பார்க்காத அளவுக்கு பலர் வாங்கி சென்றனர். கம்பு, அவல், பொட்டுக்கடலை, நவதானியம், பாசிப்பருப்பு உருண்டைகள்; கருப்புக்கவுனி அரிசி பாயசம், பருத்திப்பால் கொழுக்கட்டை என, பலவகை பண்டங்கள் விற்பனையாகின. துவங்கிய இரு மாதங்களில் நிறைய, 'ஆர்டர்' கிடைத்ததால், இரவு, பகலாக வேலை பார்க்க வேண்டி வந்தது. தனி ஆளாக ஆறு ஆண்டுகள் அனைத்தையும் சமாளித்தேன். பின், உடல் நிலை கருதி வெளி ஆர்டர்களை நிறுத்தி விட்டேன். வீட்டு அருகில் பெட்டிக்கடைகளில், ஆரோக்கியமில்லாத பல வண்ண தின்பண்டங்களை குழந்தைகள் வாங்கி சாப்பிடுவதை பார்த்து மனம் கேட்கவில்லை. அதனால் கேரட், பீட்ரூட், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சங்குப்பூ, வயலட் நிற முட்டை கோஸ் எல்லாம் சாறெடுத்து, வாத்து, வீடு, பூசணி போன்ற உருவங்களில் பல வண்ண தின்பண்டங்கள் தயாரித்து, மட்கும் தன்மை உள்ள பட்டர் பேப்பர்; பால் கொழுக்கட்டை, பாயசம் போன்ற உணவுகளை கொட்டாங்குச்சியிலும் கொடுக்கிறோம். பயன்படுத்திய பின், சுத்தமாக்கி காய வைத்து விடுவோம். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை புது கொட்டாங்குச்சிகளை மாற்றுவோம். ஒரு நாளைக்கு, 10 விதமான, 'ஸ்நாக்ஸ்' செய்கிறோம். தினமும், 'மெனு' மாறியபடியே இருக்கும். எந்த ஸ்நாக்ஸ் ஆக இருந்தாலும், விலை 5 ரூபாய் தான். இப்போது இரு பெண்கள் வேலை செய்கின்றனர். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட, 4,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. செலவெல்லாம் போக, மாதம், 20,000 ரூபாய் வரை கிடைக்கிறது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !