சாக்லேட் உருகாமல் பேக் பண்ணுவது மிகவும் அவசியம்!; சமூக வலைதளம் வாயிலாக,டக்குன்னு ஹிந்தி கற்பிப்பு
வீட்டில் இருந்தபடியே, சாக்லேட் தயாரித்து பிசினஸ் செய்து வரும், சென்னையை சேர்ந்த ப்ரியா: இன்ஜினியரிங் படித்து விட்டு தனியார் நிறுவனம் ஒன்றில், 11 ஆண்டுகள் மேனேஜராக இருந்தேன். முதல் குழந்தை பிறந்தபோது, என்கரியரில் ஒரு இடைவெளி வந்தது. பாட்டி பொறுப்பில் குழந்தையை விட்டு விட்டு வேலைக்கு திரும்பினேன்; அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, வேலையை விட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன்.சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற நிலை இல்லாவிட்டாலும், சம்பாதிக்க வேண்டும், சுயமாக நிற்க வேண்டும் என்ற ஆசை எனக்கு சிறுவயது முதலே இருந்தது; அதனால் பிசினஸ் துவங்க முடிவெடுத்தேன். 'யு டியூப்'பில் பல வீடியோக்கள் பார்த்ததில், 'கஸ்டமைஸ்டு சாக்லேட்' பண்ணினா, 'ஹிட்' ஆகும் என, தோன்றியது; கணவரும் சப்போர்ட் பண்ணினாரு. வீட்டில் உள்ளோரின் பெயர்களை சாக்லேட்டில் டிசைன் செய்து, போனில் போட்டோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட ஆரம்பித்தேன். முதல் வாடிக்கையாளர் பெங்களூரில் கிடைத்தார். தீபாவளி, பொங்கல், காதலர் தினம் என, ஸ்பெஷல் தினங்களுக்கு ஏற்ற மாதிரி வெடி டிசைன், ஹார்ட்டின் டிசைன் என, புதிதாக சாக்லேட்டுகளை டிசைன் செய்ய ஆரம்பித்தேன். வாடிக்கையாளர்கள், 'ரிட்டர்ன் கிப்ட் பண்ணுவீங்களா?' என, கேட்டனர்.வாட்டர் பாட்டில்கள், வளையல், குங்குமம் - மஞ்சள் பேக்கேஜ் என, வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருட்களை சேர்த்து சாக்லேட்டை பிரதானப்படுத்தி, ரிட்டன் கிப்ட் பேக்கேஜ்களை டிசைன் பண்ணேன். பெயர் பதிவு செய்வது, வாசகங்களை பொறிப்பது என, பல விஷயங்களை இதன் வாயிலாக கற்றுக் கொண்டேன். இப்போது, என்னிடம், 22 ரூபாய் முதல், 1,500 ரூபாய் வரை, கிட்டத்தட்ட, 40 பேக்கேஜ் இருக்கிறது. 12 ரூபாய் முதல் 900 ரூபாய் வரைக்குமான சாக்லேட்டுகள் இருக்கின்றன. ஆனாலும், 12 ரூபாய் சாக்லேட்டும், 900 ரூபாய் சாக்லேட்டும் ஒரே ருசியில் தான் இருக்கும்.சாக்லேட் தயாரிப்பதை விட, அது உருகாமல், 'பேக்' பண்ணுவது அவசியம். ஆர்டர் எடுத்த அடுத்த இரு நாட்களில் டெலிவரி செய்து விடுவோம். பிசினசை பொறுத்தவரை மார்க்கெட்டிங் ரொம்ப முக்கியம்.பொருட்களை உற்பத்தி செய்ய எவ்வளவு செலவு செய்கிறோமோ, அதில் பாதியை மார்க்கெட்டிங் செய்யவும் செலவழிக்க வேண்டும். இப்போது எனக்கு, 10,000 வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்; மாதம், 5 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்கிறேன். இது, என் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி.
எந்த மொழியையும் ஒருவர் விரும்பினால் கற்று கொள்ளலாம்!
'டக்குன்னு ஹிந்தி' என்ற சமூக வலைதளம் வாயிலாக, ஹிந்தி கற்றுத்தரும், பூஜா பாமினி:நான் அக்மார்க் திண்டுக்கல் பொண்ணு. படிச்சது, வளர்ந்தது எல்லாமே திண்டுக்கல் தான். திருமணத்திற்கு பின், பெங்களூரில் இருக்கிறேன். பாட்டி பெயர் பாக்கியலட்சுமி. எங்கப்பா அதில் முதல் மற்றும் கடைசி எழுத்தை சேர்த்து உருவாக்கியது தான், பாமி.சிறு வயதிலேயே அம்மா சொன்னாங்கன்னு தான் ஹிந்தி டியூஷன் போனேன். ஆனால் தேர்வெழுத சொன்னபோது, கடுப்பாக இருந்தது. ஆனாலும், அம்மா விடவில்லை. அப்படி பிடிக்காம எழுதி எழுதியே, கல்லுாரியில் பி.இ., படித்த போது, எம்.ஏ., ஹிந்தியும் முடித்து விட்டேன்.ஆனாலும் அப்போது எழுதி, புரிந்து கொள்ள தெரியும்; ஓரளவு தான் பேசவும் தெரியும். சென்னை, விமான நிலையத்தில் எனக்கு வேலை கிடைத்தது. வடமாநில பணியாளர்களிடம் ஹிந்தியில் பேச வேண்டிய சூழல் உருவானது. அப்போது தான் சிறிது சிறிதாக ஹிந்தி பேச ஆரம்பித்தேன். உடன் பணிபுரிவோருக்கும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன்.குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக வேலையை விட நேர்ந்தது. ஒரு கட்டத்தில், மன அழுத்தம் அதிகமாக, 'ஆன்லைனில் ஹிந்தி கிளாஸ் எடுப்போமா' என ஐடியா தோன்றவே, 'டக்குன்னு ஹிந்தி' என்ற யு டியூப் சேனல் உதயமானது.சேனல் பெயரை போலவே, டக்குன்னு ஹிந்தியை கற்றுக் கொள்வது மாதிரியான, டீச்சிங் கன்டென்ட்களை உருவாக்கி, அதை வாய்ஸ் ஓவர் வீடியோவாக்கி போட ஆரம்பித்தேன். அந்த அனுபவம் சுவாரஸ்யமாகவும், சந்தோஷமாகவும் அமைய, அதை இன்னும் சின்சியரா பண்ண ஆரம்பித்தேன். குறிப்பாக, திரைப்பட வசனங்கள் வாயிலாக, ஹிந்தியை கற்றுக் கொடுக்கிற வீடியோக்கள் ஹிட் ஆகின. இப்படி லட்சக்கணக்கில், 'பாலோயர்ஸ்' வருவாங்க, அதன் வாயிலாக என் தனிப்பட்ட பொருளாதாரம் பூர்த்தியாகும் என, அப்போது எதிர்பார்க்கவில்லை; ஆனால், அதெல்லாம் தற்போது நடந்திருக்கிறது. வாரத்துக்கு மூன்று வீடியோக்கள் என, 'டார்கெட் பிக்ஸ்' பண்ணிட்டு, இப்போது வரை அதை பின்பற்றி வருகிறேன்.என் சமூக வலைதள பக்கங்கள் ஹிட் ஆக ஆக, 'நெகட்டிவ் கமென்ட்'களும் வர ஆரம்பித்தன. இப்போது அதெல்லாம் எனக்கு பழகி விட்டது. ஹிந்தி மட்டுமல்ல... எந்த மொழியையும் ஒருவர் விரும்பினால், கற்றுக் கொள்ளலாம்; அது, அவர்களின் தனிப்பட்ட தேர்வு. அதேபோல், எந்த மொழியையும் கற்பதற்கு வற்புறுத்தக்கூடாது. பெண்கள், நமக்கு நாமே ஒரு கோல் பிக்ஸ் பண்ணிக்கிட்டு, அதை நோக்கி, நகரணும், முன்னேற வேண்டும்.பர்சனல் வாழ்க்கையோ, புரொபஷனல் வாழ்க்கையோ... இதுவரை அப்படி இல்லை என்றாலும், இனி, ஏக்... தோ... தீன்... ஸ்டார்ட்!தொடர்புக்கு: 85239 83716