வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தம்பி நீடூழி வாழ ஆண்டவன் கருணை புரிந்துள்ளார் ,நன்றி அய்யா நாராயணா
கடலில் தவறி விழுந்து, ஒரு நாள் முழுதும் தத்தளித்து காப்பாற்றப்பட்ட, திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே உள்ள செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவமுருகன்: எனக்கு, 3 வயதாக இருக்கும்போதே அம்மா இறந்து விட்டார். அப்பா தான் மிதிவண்டியில் குச்சி ஐஸ் வியாபாரம் செய்து படிக்க வைத்தார். 10 ஆண்டுகள் சிங்கப்பூரில் பணிபுரிந்து, மூன்று மாதத்திற்கு முன் தான் ஊருக்கு வந்தேன். செப்டம்பர், 20ம் தேதி சின்ன முட்டத்தில் இருந்து கடலுக்குள் சென்று மீன் பிடித்து, கரை திரும்பிக் கொண்டிருந்தோம். இரவு சிறுநீர் கழிப்பதற்காக படகு ஓரத்துக்கு சென்றேன். ஒரு பெரிய அலையில், படகு மேல் எழும்பி குலுங்கியது; நிலைதடுமாறி கடலில் விழுந்து விட்டேன். எனக்கு நீச்சல் தெரியும் என்பதால் தண்ணீருக்குள் விழுந்த உடனே மேலே வந்தேன். ஆனால், படகு அதிக துாரம் சென்று விட்டது. சிறிது நேரத்தில், 'அண்ணன் இல்லை' என்று என் தம்பி அலறி, படகை திருப்பி, ஏற்கனவே வந்த வழியில் தேடியும் என்னை கண்டுபிடிக்க முடியவில்லை. கடலில் நீந்துவதற்கு சிறு கட்டை கூட இல்லை. முகத்தில் அலை அடித்தபடியே இருந்ததால், முகத்தில் தோல் பிய்ந்து காந்தலாக இருந்தது; உப்பு தண்ணீர் வாய்க்குள் சென்றதால், தொண்டை புண்ணாகியது; கண்களும் எரிந்தன. அன்று அமாவாசை என்பதால் கும்மிருட்டாகவும், அலைகளின் வேகம் அதிகமாகவும் இருந்தது. இரவு ஜெல்லி மீன்களும், நண்டுகளும் கடிக்க துவங்கின. உயிரை கையில் பிடித்தபடி, அன்று முழுதுமே தண்ணீரில் மிதந்தபடியே இருந்தேன். மறுநாள் இரவு கூத்தங்குழியைச் சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள், விரித்த வலையை எடுக்க வந்தனர்; அவர்கள் முன்பக்கம் பெரிய லைட் வைத்திருந்தனர். உடம்பில் மிச்சமிருந்த வலுவை எல்லாம் திரட்டி, கையை உயர்த்தி காட்டினேன்; பார்த்துவிட்டு பதறி பக்கத்தில் வந்து என்னை துாக்கினர். டீ, பிஸ்கட் கொடுத்தனர். 'உடனே கரைக்கு போகலாம்' என்று கூறினர். அப்படி சென்றா ல், அவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படும் என்பதால், 'உங்கள் வேலையை முடித்து விட்டு போகலாம்' என்றேன். வலையை எடுத்துக் கொண்டு திங்கள் அதிகாலை, 4:30 மணிக்கு கூத் தங்குழி கரைக்கு வந்தோம். கன்னியாகுமரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்ததில், 'நுரையீரலில் கொஞ்சம் அழுக்கு இருக்கு' என கூறினர்; மருந்து மற்றும் குளுக்கோஸ் ஏற்றி, வீட்டிற்கு அனுப்பினர். நான் இப்போது உயிரோடு இருக்க காரணம், என் குலதெய்வமும், கூத்தங்குழி மீனவர்களும் தான்.
தம்பி நீடூழி வாழ ஆண்டவன் கருணை புரிந்துள்ளார் ,நன்றி அய்யா நாராயணா