உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / இழப்பு என்பது தோல்வியாகாது!

இழப்பு என்பது தோல்வியாகாது!

'மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்' மற்றும் மாற்றுத்திறனாளியான மாளவிகா: என் பூர்வீகம் கும்பகோணம். அப்பா, ராஜஸ்தானில் அரசு வேலையில் இருந்ததால், நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் ராஜஸ்தான் தான்.என் 13வது வயதில், வீட்டுக்கு பக்கத்தில் இருந்த வெடிமருந்து கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டு, ராணுவ வீரர்கள் வந்து சரிசெய்து விட்டு சென்றனர்.அது நடந்து ஆறு மாதங்கள் கழித்து, ஒருநாள் வீட்டுக்கு வெளியில் விளையாடி கொண்டிருந்த போது, ஏற்கனவே வெடித்த வெடிகுண்டு துண்டு ஒன்றை தெரியாமல் கையில் எடுத்ததில், சட்டென வெடித்தது. அதில், என் இரண்டு கைகளும் துண்டாகி விட்டன; இடது கால் அறுந்து தொங்கியது.நான் பிழைப்பேனா, மாட்டேனா என்று எதுவும் கூறாமல், விடிய விடிய ரத்தம் ஏற்றினர். நான்கைந்து நாட்கள் கழித்து, அறுந்து தொங்கிய என் காலை வெட்ட வேண்டும் என்று கூறினர். இரண்டு கையும், ஒரு காலும் இல்லை என்றால் என்ன செய்வது என்று, என்னை ஜெய்ப்பூருக்கு அழைத்து சென்றனர்.வெடித்த குண்டு சிதறல்கள் காலுக்குள் ஆழமாக ஊடுருவி இருந்ததால், அதை சுத்தம் செய்யவே பல மாதங்கள் ஆகின. 10 நாட்களுக்கு ஒருமுறை ஆபரேஷன் நடந்தது. ஒன்றரை ஆண்டுகள் படுத்த படுக்கையாகவே இருந்தேன். அதன்பின் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர். விபத்து நடந்து ஓராண்டில் எனக்கு செயற்கை கைகள் பொருத்தினர்.பிளஸ் 2 வரை பிரைவேட்டாக படித்து, 98 சதவீத மதிப்பெண்கள் வாங்கினேன். அதன்பின் கல்லுாரி வாழ்க்கை இன்னும் சவாலாகவே இருந்தது. அடுத்து மாஸ்டர்ஸ் முடித்து, 'மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத்தரம்' என்ற தலைப்பில் எம்.பில்., முடித்தேன். அடுத்து, 'மாற்றுத்திறனாளிகளிடம் இளம் தலைமுறையினரின் அணுகுமுறை' என்ற தலைப்பில் பிஎச்.டி., செய்தேன். கூடவே, 'மோட்டிவேஷனல் ஸ்பீச்' கொடுக்கவும் ஆரம்பித்தேன்.காதல் திருமணம் முடித்து, ஒன்பது ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தேன். கணவருக்கு பல நேரங்களில் எனக்கு கை இல்லை என்பதே மறந்து விடும். ஒருநாளும் வித்தியாசமாக நடத்தியது இல்லை.தற்போது எனக்கு கால் நரம்புகளில் பிரச்னை ஏற்பட்டுஉள்ளது.இன்னும் சில ஆபரேஷன்கள் மிச்சமிருக்கின்றன; ஆனாலும் மனதளவில் உறுதியுடன் தான் இருக்கிறேன். சிகிச்சைக்காக தற்போது சென்னை வந்துள்ளேன். மாற்றுத்திறனாளிகளுக்காக செய்ய வேண்டிய வேலைகளும் மிச்சமிருக்கின்றன.இழப்பது என்பது தோல்வியாகாது; கைவிடுவது தான் தோல்வி என்பதை உறுதியாக நம்புபவள் நான். அந்த வகையில் நான் ஜெயித்துவிட்டதாக நினைக்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி