உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / என் குரு மாமியார் தான்!

என் குரு மாமியார் தான்!

சேமிப்பின் அவசியம் குறித்து கூறும், சென்னையைச் சேர்ந்த பி.எம்.ஜெ.சுமையா: என் மாமியார், பண விஷயத்தில் மிகவும் கறார். எனக்கு திருமணமான புதிதில், அவரது நடவடிக்கைகளை பார்த்து மிகவும் சங்கடமாக இருந்தது. ஒருநாள் என் கணவரிடம் முறையிட்டேன். அவர், தன் அம்மாவின் வாழ்க்கை குறித்து என்னிடம் விளக்கினார்...'அம்மா, சிறு வயதில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வளர்ந்தவர். பணத்தின் அருமையை, நம்மை விட அதிகமாக அறிந்தவர். 'அவர், எந்த செலவையும் பலமுறை யோசித்து தான் செய்வார். திட்டமிட்டு செலவு செய்து, சேமித்ததால் தான், கடன் வாங்காமல் என் அக்காவை எம்.எஸ்சி.,யும், என்னை இன்ஜினியரிங்கும் படிக்க வைக்க முடிந்தது. 'கடைக்கு சென்றால்கூட, எழுதிக் கொண்டு போன பட்டியல்படி மட்டுமே பொருட்களை வாங்குவார். எங்களிடமும் சேமிப்பு பழக்கத்தை உருவாக்க, சிறு வயதிலேயே உண்டியல் வாங்கி தந்து, சேமிக்க கற்றுக் கொடுத்தார்.'சேமிக்கும் பழக்கம் வந்துவிட்டால், அநாவசிய செலவுகளை நிச்சயமாக செய்ய மாட்டோம் என்பார் அம்மா' என, விளக்கினார்.அதன்பின் தான், 'மாமியார் சரியான கஞ்சமா இருக்காங்களே' என்ற எண்ணம், என்னை விட்டு விலகியது. அதன்பின், அவருடைய செலவு, சேமிப்பு நுணுக்கங்களை பார்த்து, ஆச்சரியப்பட ஆரம்பித்தேன். தேவையான பொருளாக இருந்தாலும், விலை அதிகமாக கூறுகின்றனர் என உணர்ந்தால், பேரம் பேசி விலையை குறைத்து, நியாயமான விலைக்கு வாங்கி வருவார்.ஒருமுறை, என் தங்கை திருமணத்துக்கு நகை வாங்க, பிரபல நகைக்கடைக்கு சென்றிருந்தோம். என் அப்பா செய்கூலி, சேதாரத்தை குறைத்து கேட்க தயங்கி நின்றார். அந்த நேரத்தில், 'நம்மை நம்பித்தான் கடைகள் இருக்கின்றனவே தவிர, கடைகளை நம்பி நாம் இல்லை' என்று அப்பாவுக்கு தைரியமூட்டி, கடை மேலாளரின் அறைக்கு சென்று, கணிசமான அளவுக்கு விலையை குறைத்து, நகைகளை வாங்கி தந்தார்.வீட்டில் கார் இருக்கிறது; ஆனால், அவசர தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவோம். தற்போது, பணி நிமித்தமாக நானும், கணவரும் தனிக்குடித்தனம் வந்து விட்டோம். மாமியார் மேற்கொண்ட பண நிர்வாகத்தை, அப்படியே நானும் பின்பற்றுகிறேன்.அவரை போலவே சேமிக்கவும், தேவைக்கு மட்டுமே செலவு செய்யவும் பழகி விட்டேன். கையில் பணம் தாராளமாக புழங்குகிறது. சேமிப்பையும், முதலீட்டையும் நான் அதிகரித்து வருவதை பார்த்து, கணவர், என்னை புகழ்ந்துதள்ளுகிறார். எல்லாப் புகழும், என் குரு மாமியாருக்கு தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை