UPDATED : செப் 19, 2011 01:33 AM | ADDED : செப் 18, 2011 08:15 PM
மனதளவில் பயிற்சி வேண்டும்! கிராமப்புற மாணவர்களால் நாட்டிற்கு பதக்கங்களை வாங்கித் தர முடியும்; சொல்கிறார் பெருமாள் ராமசாமி: காரைக்குடி அருகிலுள்ள மணிச்சை தான் என் சொந்த ஊர். சின்ன வயதில் மிகவும் சுட்டித்தனமாக விளையாடுவேன். கால்பந்தில் பெரிய வீரனாக வேண்டும் என்பதே ஆசை.திருச்சி கேம்பியன் பள்ளியில் படிக்கும் போது, டென்னிசன் என்ற ஆசிரியர், தமிழக அளவில், நான் பல போட்டிகளில் வெல்ல காரணமாக இருந்தவர்.என் கல்லூரி இறுதி ஆண்டில், ஒரு போட்டியில் பங்கேற்ற போது, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், என் கால்பந்து கனவு கலைந்தது. பின், முயற்சித்து தடகளத்தில் இறங்கினேன்.தமிழகத்தில் பல ஆண்டுகளாகியும், குண்டு எறிதல் போட்டியில், இந்திய அளவில் பதக்கம் வெல்ல முடியாத சூழல் இருந்தது. எனவே, நான் சில மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தேன்.பயிற்சியின் முடிவில், கலையரசன் என்ற மாணவன், இந்திய அளவில் தங்கப் பதக்கம் வென்றான்.என்னிடம் பயிற்சி பெற்றவர்கள், வெளிநாடுகளில் கூட பதக்கங்களை வென்றுள்ளனர். இதனால், இந்திய சங்கிலி குண்டெறிதல் ஆணையத்தில் வேலை கிடைத்தது.கிராமப்புற மாணவர்களை தடகளப் போட்டியில் பங்கேற்க செய்ய வேண்டும் என்பதற்காக, வேலையை விட்டு விட்டேன். கிராமப்புற மாணவர்களிடம் வறுமை ஒன்றே சாதனைக்கு முட்டுக்கட்டை. அன்றாட உணவுக்கே சிரமப்படும் பல மாணவர்கள், விளையாடி பதக்கம் பெற்றுள்ளனர். என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர், அரசு வேலைகளிலும், ராணுவத்திலும் உள்ளனர். மாணவர்களுக்கு, உடலளவில் பயிற்சி கொடுப்பதை விட, மனதளவில் பயிற்சி கொடுத்தால், பெரிய அளவில் சாதிப்பார்கள்!