எவ்வளவு தடைகள் வந்தாலும் பின்வாங்க கூடாது!
மாத்திரை, டானிக் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு, தேவையான இயந்திரங்களை வடிவமைத்து கொடுக்கும், சென்னை, மறைமலை நகர், 'கிபி என்டர்பிரைசஸ்' நிறுவனர் துர்கா:நான் பிறந்து, வளர்ந்தது திருவொற்றியூர். நடுத்தர குடும்பம் தான். பி.சி.ஏ., படித்தேன்; 2014ல் திருமணம். ஐ.டி.ஐ., படித்த கணவர், 'பார்மா' கம்பெனியில் மெயின்டனன்ஸ் மேனேஜர், பின்னர் மருந்து தயாரிக்கும் இயந்திர பாகங்களை வாங்கி விற்கும் பிசினஸ், பார்மா கம்பெனிகளுக்கு இயந்திரங்களை சர்வீஸ் செய்யும் வேலை செய்து கொண்டிருந்தார்.நான் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில், அக்கவுன்ட்ஸ் துறையில் பணிபுரிந்தேன். குழந்தைகள் பிறந்த பின், கணவருக்கு அனுபவம் உள்ள, மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கான இயந்திரங்களை வடிவமைக்கும் பிசினஸ் துவங்க முடிவெடுத்து, வாடகை இடத்தில், 'கிபி என்டர்பிரைசஸ்' கம்பெனியை 2017ல் துவக்கினோம்.முதல் இரண்டு ஆண்டுகள் சின்ன சின்ன ஆர்டர்கள் மட்டுமே கிடைத்தன. அந்த வருமானம் மூலப்பொருட்கள், ஊழியர்களின் சம்பளத்துக்கே சரியாக இருந்தது. புதுடில்லி மற்றும் நொய்டாவில், 2019-ல் ஐந்து நாட்கள் நடைபெற்ற எங்கள் தொழில் சார்ந்த கண்காட்சியில் பங்கேற்றோம்.இந்தியா முழுக்க இருந்து பல நிறுவனங்கள் பங்கேற்றன; 150 பார்மா நிறுவனங்களிடம் எங்கள் விசிட்டிங் கார்டுகளை கொடுத்தோம். ஊருக்கு திரும்பியதும், கிட்டத்தட்ட 120 நிறுவனத்தினர் எங்களிடம் பேசினர். அவற்றில், 30 ஆர்டர்கள் உறுதியாகின. முழு வீச்சுடனும், உற்சாகத்துடனும் வேலை பார்த்து, அவர்கள் கேட்ட இயந்திரங்களை, எதிர்பார்த்த தரத்துடன் முடித்து கொடுத்தோம்.மாத்திரைகள் தயாரிக்க 30, டானிக் உள்ளிட்ட திரவ வகை மருந்துகளை தயாரிக்க 20 வகை மிஷின்கள் உள்ளன. குறித்த நேரத்தில் முழுமையான பினிஷிங்கோடு டெலிவரி கொடுத்தது, கஸ்டமர்களை மீண்டும் எங்களை தேடி வர வைத்தது.இப்போது 15 ஊழியர்களும், ஆர்டர் நிறைய வந்தால், ஒப்பந்த அடிப்படையில் ஐந்து ஊழியர்களும் என்ற அளவுக்கு கம்பெனியை உயர்த்திருக்கிறோம். மாதம், சராசரியாக ஏழு ஆர்டர்கள், 15 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' என்று சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.எவ்வளவு தடைகள் வந்தாலும் பின்வாங்கக் கூடாது. 'ஓரளவுக்கு வளர்ந்து விட்டோம்' என்று உதவியாளர்களிடம் பொறுப்பை தள்ளாமல், நம் கட்டுப்பாட்டிலேயே எல்லாவற்றையும் வைத்துக்கொள்ள வேண்டும்.