உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  எதை விட்டுக் கொடுத்தாலும் படிப்பை விட்டுக் கொடுக்க கூடாது!

 எதை விட்டுக் கொடுத்தாலும் படிப்பை விட்டுக் கொடுக்க கூடாது!

கரூரை சேர்ந்த, 24 வயதான கார்த்திகா: என் அப்பா மாற்றுத்திறனாளி. ஆயினும், ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் தையல் வேலை செய்கிறார். அம்மா கார்மென்ட்ஸ் வேலைக்கு செல்கிறார். இருவரும் ஓய்வு இல்லாமல் உழைப்பதை பார்த்து வளர்ந்ததால், 'நன்றாக படித்து வேலைக்கு செல்ல வேண்டும்' என்பது, மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அதனால் எந்த வாய்ப்பையும் தவறவிடாமல், ஒரு நிமிடத்தை கூட வீணாக்காமல் படித்தேன். அரசு உதவி பெறும் பள்ளியில் தான், 10ம் வகுப்பு வரை படித்தேன். என் மதிப்பெண்களை பார்த்து, கரூரில் உள்ள தனியார் பள்ளியில் நிதியுதவியுடன் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கேயும் நல்ல மதிப்பெண் பெற்றதால், இன்ஜி., கல்லுாரியில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கான உதவித்தொகையும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, முதல் தலைமுறை பட்டதாரிக்கான உதவித்தொகையும் கிடைத்தது. அப்பா மாற்றுத்திறனாளி என்பதால், சொற்ப வருமானத்தில் அவருக்கான தேவைகளை பார்த்துக் கொள்ளவே சரியாக இருக்கும். அம்மாவின் வருமானத்தில் தான் குடும்பம் நடந்தது. கல்லுாரி முடித்ததும் வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்பது பல நாள் கனவு. சென்னையில் உள்ள ஒரு பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிற்சிக்கு சேர்ந்தேன்; பின், அதே நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது. முதல் மாத சம்பளத்தை கையில் வாங்கியபோது, 'இனி நாங்களும் வாழ்க்கையில் ஆசைப்படலாம்'னு தோன்றியது! வீட்டின் தேவைகளை நிறைவேற்ற துவங்கினேன். அப்பாவுக்கு இதயத்தில் பிரச்னை... அம்மாவுக்கும் திடீர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. என் சம்பளத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளித்தேன். என்னோட படிப்பும், வேலையும் தான் எங்களின் தன்மானத்தை மட்டுமில்லாமல், அப்பா, அம்மா உயிரையும் காப்பாற்றியது. கரூரிலேயே வளர்ந்ததால், வேலைக்காக சென்னைக்கு முதன்முதலில் வந்தபோது அந்த இடமும், சூழலும், தனிமையும் மிகவும் புதிதாக இருந்தன. ஆனால், வேலை கொடுத்த தைரியத்தில் இன்று நான் புராஜக்ட்டுக்காக பல மாநிலங்களுக்கு பயணிக்கிறேன்; கல்வியால் மட்டுமே இவ்வளவும் சாத்தியமாகிறது. படிக்கிற காலத்தில் ஆசிரியர், படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லிக் கொண்டே இருப்பார்; அது அவ்வளவு பெரிய விஷயமாக தெரியாது. ஆனால், படிப்பு மட்டும் தான் வாழ்க்கையில் நிரந்தரம். அதுதான் நமக்கு தன்னம்பிக்கை, தைரியம் உள்ளிட்ட பல விஷயங்களை தரும் என்பதற்கு என்னை மாதிரி எத்தனையோ பேர் உதாரணங்களாக இருக்கின்றனர். படிப்பு எல்லாவற்றையும் கொடுக்கும். எதை விட்டுக் கொடுத்தாலும் படிப்பை மட்டும் விட்டுக் கொடுக்க கூடாது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !