எந்த வெற்றியும் எளிதாக கிடைத்து விடாது!
குடிமைப்பணி தேர்வில், ஆறாவது முயற்சியில் வெற்றி பெற்று, விழுப்புரத்தில் பயிற்சி ஆட்சியராக பணிபுரிந்து வரும் வெங்கடேஸ்வரன்:
என் சொந்த ஊர், நாகர்கோவில். அப்பா, தமிழக அரசின் கைத்தறி துறையில் அதிகாரியாக பணிபுரிந்தவர்; அம்மா இல்லத்தரசி. சிறு வயதில் ஒருமுறை அப்பாவின் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு இருந்த பரபரப்பும், அதிகாரிகளுக்கு கிடைக்கும் மரியாதையும் எனக்குள் வியப்பை ஏற்படுத்தியது. நானும் பெரிய அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அப்பாவிடம் கூறியபோது, என்னை ஐ.ஏ.எஸ்., படிக்க சொல்லி ஊக்கப்படுத்தினார். பள்ளி படிப்பு முடித்ததும், இளங்கலை கட்டட பொறியியல் படித்தேன். பின், சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம், 12,400 ரூபா ய் உதவித்தொகை யுடன், முதுகலை பட்டப்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தது. படித்து முடித்ததும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். மூன்று ஆண்டுகள் தொடர் தோல்விகள். ஒவ்வொரு தேர்வு முடிவு வெளியான போதும் மன உளைச்சலுக்கு ஆளானேன்; ஆனாலும், முயற்சிகளை கைவிடவில்லை. தேர்வு முடிவு வந்த அடுத்த நாளே, அடுத்த ஆண்டுக்கான தேர்வுக்கு படிக்க ஆரம்பித்தேன். மூன்று ஆண்டு போராட்டத்துக்கு பின், 2020ல் மத்திய உளவுத்துறை தேர்வில் வெற்றி பெற்று, வேலைக்கு சேர்ந்தேன். பொருளாதார ரீதியாக ஒரு ஆசுவாசம் கிடைத்தாலும், ஐ.ஏ.எஸ்., கனவு என்னை துரத்திய படியே இருந்தது. மீண்டும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் போட்டி தேர்வுகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ஐந்து தோல்விகளுக்கு பின்னும் நம்பிக்கையை கைவிடவில்லை. தினமும் அதிகாலை, 3:00 மணி முதல், 9:00 மணி வரை படிப்பேன். அதன்பின் வேலைக்கு கிளம்புவேன். தொடர்ந்து படித்தபடியே இருந்ததால், 2024ல் என் ஆறாவது முயற்சியில் வெற்றி பெற்றேன். இப்போது பயிற்சி ஆட்சியராக, விழுப்புரத்தில் பணியை துவக்கி இருக்கிறேன். இத்தனை ஆண்டுகள் என்னை நம்பிய என் குடும்பத்துக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். எந்த வெற்றியும் எளிதாக கிடைத்து விடாது. தோல்விகளை எதிர்த்து போராடணும். எத்தனை முறை தோற்றாலும், முயற்சியை மட்டும் கைவிடவே கூடாது. இந்த மனப்பான்மை தான், இப்போது என்னை இந்த பொறுப்பில் உட்கார வைத்திருக்கிறது. இதற்காக, ஆறு ஆண்டுகள் போராடி இருக்கிறேன். பின்புலம் இருந்தால் தான் அடையாளங்களை உருவாக்க முடியும் என்பது இல்லை. முயற்சியும், நம்பிக்கையும் இருந்தால் போதும், நமக்கான அடையாளங்களை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும்.