உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  ஒரு வருமானம் செலவுக்கு; மற்றது சேமிப்புக்கு!

 ஒரு வருமானம் செலவுக்கு; மற்றது சேமிப்புக்கு!

திடீர் வருமானத்தைக் கண்டதும், கண்டபடி செலவு செய்து, கை சுட்டதும், மனைவியின் சொல்படி, கச்சித வாழ்க்கைக்கு மாறியதை பெருமையுடன் கூறும், துாத்துக்குடி மாவட்டம், வேம்பாரைச் சேர்ந்த மு.க.இப்ராஹிம்: நடுத்தர குடும்பம் எங்களுடையது. மூத்தவனாக பிறந்த காரணத்தால், எனக்கு குடும்ப சுமை மட்டுமல்ல, பொறுப்புகளும் அதிகம். வறுமையும், வெறுமையும் விரட்டினாலும், எப்படியோ சிரமப்பட்டு, சிலரின் உதவியுடன் ஆசிரியர் பயிற்சியை முடித்தேன். அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஒன்றில், திருமணத்துக்கு முன்பே பணியில் சேர்ந்து விட்டேன்; பத்து ஆண்டுகள் கழிந்து விட்டன. 'கையில் வாங்கினேன், பையில் போடவில்லை; காசு போன இடம் தெரியலை...' என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளுக்கேற்ப, மிச்சம் ஏதுமில்லை. நீண்ட தேடலுக்கு பின், என் ஆசை போலவே, ஆசிரியர் பணியில் இருந்த ஷகிலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். மாதந்தோறும் மனைவியின் ஊதியமும் கையில் கிடைக்கவே, தாராளமாக செலவு செய்யும் போக்கு துவங்கியது. இரு குழந்தைகள் பிறந்து விட்டனர்; ஆசிரியர் பணியும், 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை; ஆனால், தாராளமாக செலவு செய்வது மட்டும் நின்றபாடில்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மனைவி, 'இப்படியே இருந்தால், நாம் முன்னேற முடியாது. உங்க சம்பளம் பசங்க படிப்பு செலவு, வீட்டு வாடகை, உங்க அப்பா, அம்மா, சொந்த பந்தங்களுக்கு செய்யும் செலவுகளாக இருக்கட்டும். என் சம்பளம், நம் எதிர்கால தேவைக்கு இருக்கட்டும். இனி, என் சம்பளத்தில் இருந்து ஒரு பைசா கூட செலவு செய்யக்கூடாது' என, நிதி மேம்பாட்டுக்கான பணத் திட்டத்தை பக்காவாக போட்டு தந்தார். இந்த திட்டத்தை பயன்படுத்த துவங்கி, இரண்டு ஆண்டுகள் ஆனது. என் வருங்கால வைப்பு சேமிப்பு பணம் மற்றும் மனைவியின் சேமிப்பு பணம் இரண்டையும் சேர்த்து, நாங்கள் வேலை பார்க்கும் ஊரிலேயே ஓர் இடத்தை வாங்கி, பிரமாண்டமாக வீடு கட்டி முடித்தோம். இப்போது வீட்டு தவணை செலுத்த வேண்டி இருப்பதால், செலவுகளை குறைத்து, அவசிய செலவுகளை மட்டும் செய்ய ஆரம்பித்து விட்டேன். ஒவ்வொரு நாளும் வீட்டுக்குள் நுழையும்போதெல்லாம், மனைவியின் நிர்வாகத்திறன் தான் நினைவுக்கு வரும். அதுதான் இப்படி வீட்டையும், வசதியான வாழ்க்கையையும் கொடுத்துள்ளது. இப்படி வாழ்க்கையில் எல்லா, 'பாசிட்டிவ்' விஷயங்களுக்கும் காரணம், மனைவியின், 'ஒரு வருமானம் செலவுக்கு; ஒரு வருமானம் சேமிப்புக்கு' என்ற பணத் திட்டம் தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை