விதை இஞ்சியில் ஆண்டுக்கு ரூ.1.87 லட்சம் லாபம்!
தென்னந்தோப்பில் ஊடுபயிராக, இஞ்சி சாகுபடி செய்து வருமானம் ஈட்டும், தென்காசி மாவட்டம், புளியரை கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை: எங்கள் குடும்பத்திற்கு, 8 ஏக்கர் நிலம் இருக்கிறது. நான், 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு, 1992ல் முழு நேரமாக விவசாயத்தை கவனிக்க துவங்கினேன். இந்த பகுதியை பொறுத்தவரைக்கும் தண்ணீருக்கு பஞ்சம் கிடையாது; விவசாயம் செழிப்பாக இருக்கும். அரை ஏக்கருக்கு சற்று மேல் தென்னந்தோப்பு இருக்கிறது. தென்னை மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக இஞ்சி சாகுபடி செய்து வருகிறேன். இதில் எனக்கு, 25 ஆண்டு அனுபவம் இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் எங்கள் நிலம் அமைந்திருக்கிறது. இஞ்சி செழிப்பாக விளையுறதுக்கு தேவையான, குளிர்ச்சியான காற்றோட்டம், ஈரப்பதம் மற்றும் போதுமான சூரிய வெளிச்சம் கிடைக்கிறது. எங்கள் பகுதி விவசாயிகள், இஞ்சி சாகுபடிக்கு பெரும்பாலும் ரசாயன இடுபொருட்கள் பயன்படுத்துவது இல்லை. அருகில் உள்ள கேரள மாநிலத்தின் கொல்லம், புனலுார், கொட்டாரக்கரா போன்ற ஊர்களில் தரமான நாட்டு ரக விதை இஞ்சி கிடைக்கிறது. 1 கிலோ, 140 ரூபாய்க்கு வாங்கி, அதை பயிர் செய்கிறேன். குறைந்தபட்சம், 12 மாதங்களுக்கு பிறகு அறுவடை செய்து, விதை இஞ்சியாக விற்பனை செய்கிறேன். இதனால், எனக்கு 1 கிலோவுக்கு, 100 ரூபாயில் இருந்து அதிகபட்சம், 140 ரூபாய் வரைக்கும் விலை கிடைக்கிறது. 30 சென்ட் பரப்பில் விளைந்த இஞ்சியை, ஒரே சமயத்தில் முழுமையாக அறுவடை செய்ய மாட்டேன்; அதிக விலை கிடைக்கும் சமயங்களில் மட்டும் பகுதி பகுதியாக அறுவடை செய்து விற்பனை செய்வேன். விதைக்காக உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அறுவடைக்கு தயாரானதில் இருந்து, ஒரு ஆண்டு வரை மண்ணுக்குள்ளேயே இருந்தாலும், எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. நாம் எதிர்பார்க்கும் விலைக்கு, விதை இஞ்சியாக கொள்முதல் செய்யக்கூடிய வியாபாரிகளுடைய தொடர்புகள் அவசியம். இது சாத்தியப்பட்டால் தான், விதை இஞ்சியாக விற்பனை செய்து அதிக லாபம் பார்க்க முடியும். எனக்கு, 30 சென்டில் குறைந்த பட்சம், 25 டன் விதை இஞ்சி மகசூல் கிடைக்கும். 1 கிலோ, 100 ரூபாய் என்று விற்பனை செய்வதன் வாயிலாக ஆண்டுக்கு, 2.50 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். சாகுபடி, அறுவடை உள்ளிட்ட எல்லா செலவுகளும் போக, ஆண்டுக்கு, 1.87 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். தொடர்புக்கு: 94861 81118.