உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / ரூ.20 லட்சம் வருமானத்தில் ரூ.5 லட்சம் லாபம்!

ரூ.20 லட்சம் வருமானத்தில் ரூ.5 லட்சம் லாபம்!

பலாப்பழத்தில் சிப்ஸ், பலாக்கொட்டை காபி பொடி, பலா இலை டீத்துாள் என, மதிப்பு கூட்டி விற்பனை செய்து வரும், கடலுார் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த விவசாயி மோகன் சுப்புராயன்: இதுதான் என் சொந்த ஊர். அப்பா, கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றினார். அத்துடன் விவசாயத்தையும் கவனித்துக் கொண்டார். எங்களுக்கு 20 ஏக்கர் நிலம் இருக்கிறது. நெல், கரும்பு, முந்திரி, பலா உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து வந்தோம். நான், முதுகலை பொருளாதாரம் முடித்தபின், விவசாயத்தை கவனித்தபடியே முந்திரி எண்ணெய் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தேன். இந்நிலையில் தான், பலா மதிப்புக் கூட்டலில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. பலா சாகுபடி செய்யக்கூடிய என்னை போன்ற விவசாயிகளை விடவும், வியாபாரிகள் தான் இதில் அதிக லாபம் பார்க்கின்றனர் என்ற ஆதங்கம்தான், இதற்கு உந்துசக்தி.அதனால், 2016ல் மதிப்பு கூட்டும் முயற்சியில் இறங்கினேன். பலாப்பழ சிப்ஸ், பலாக்காய் பொடி, பலாக்கொட்டை காபி பொடி, பலா இலை டீ, பலா நுாடுல்ஸ், பலா பாஸ்தா உள்ளிட்டவை தயார் செய்து, விற்பனை செய்ய ஆரம்பித்தேன். சென்னை, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இதற்கு நல்ல வரவேற்பு. அதனால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்தும் கொள்முதல் செய்து தயாரிக்கிறேன்.பலாக்காய் பொடியை கோதுமை மாவில் கலந்து ரெடிமிக்ஸ் பாஸ்தா, ரெடிமிக்ஸ் நுாடுல்ஸ் தயார் செய்கிறேன். நிலக்கடலையுடன், 10 சதவீதம் பலாக்காய் பொடி சேர்த்து, கடலை மிட்டாய் தயாரிக்கிறேன். நன்கு பழுத்த பலா பழங்களில் இருந்து சுளைகள் எடுத்து, சோலார் டிரையரில் உலர வைத்து, அதை தேனில் ஊற வைத்து, 'பலா தேன் லெதர்' என்ற பெயரில் விற்பனை செய்கிறேன்.பலா காய்ப்பு இல்லாத மாதங்களில் சப்போட்டா, மாம்பழம், அன்னாசி உள்ளிட்ட பழங்களில் சிப்ஸ் தயாரித்து விற்பனை செய்கிறேன். வாழைப்பழங்களை சோலார் டிரையரில் உலர வைத்து, அதை பொடியாக அரைத்து, பிஸ்கட் தயார் செய்கிறேன். நான் உற்பத்தி செய்யக்கூடிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை, என்னுடைய, 'அதிகை நேச்சுரல்ஸ்' என்ற இயற்கை அங்காடி வாயிலாகவும், மக்களிடமும் நேரடியாக விற்பனை செய்கிறேன். டீலர்கள் வாயிலாக மொத்த விலையில் சூப்பர் மார்க்கெட், பலசரக்கு கடைகள் மற்றும் உணவகங்களுக்கும் விற்பனை செய்கிறேன்.மொத்தம், 45 வகையான மதிப்பு கூட்டல் பொருட்களை விற்பனை செய்கிறேன். ஒரு மாதத்திற்கு, 20 லட்சம் ரூபாய் வரை வருமானம் வருகிறது. இதில் எல்லா செலவுகளும் போக, 5 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. தொடர்புக்கு81100 33995


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை