ரூ.1,000 கோடி வர்த்தக இலக்கை நோக்கி பயணம்!
கிட்டத்தட்ட, நுாற்றாண்டு பாரம்பரியம் கொண்ட சேலம் நரசுஸ் காபி நிறுவனத்தின் தலைவர் சிவானந்தம்: சுதந்திரத்திற்கு முந்தைய பிரிட்டிஷ் ஆட்சி காலம் அது. சேலத்தில் வசித்து வந்த லட்சுமி நரசிம்மன் என்பவர், காபி பிரியர்களான தன் ஆங்கிலேய நண்பர்களுக்கு காபி தயாரித்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அதுவே, பின் அவரது தொழிலாயிற்று. நரசிம்மனுக்கு நெருங்கியவர்கள், அவரை செல்லமாக, 'நரசு' என்று அழைப்பர். அதே பெயரில் 1926-ல், 'நரசுவின் காபி நிலையம்' எனும் பொருள்பட, 'நரசுஸ் காபி' நிறுவனம் உருவானது. 1966-ம் ஆண்டு, என் அப்பா ஆர்.பி.சாரதி தலைமையிலான நிறுவனம் நரசுஸ் காபி நிறுவனத்தை வாங்கியது. நான் கல்லுாரி படிப்பு முடித்ததும், 1983-ல் ஜெர்மனி சென்று, அங்குள்ள நவீன காபி தயாரிப்பு இயந்திரங்களின் நுட்பங்களை தெரிந்து கொண்டேன். 1994ல், எங்களது சேலம் ஆலையில் முழுமையான தானியங்கி, 'பேக்கிங்' அமைப்பை வெற்றிகரமாக செயல்படுத்தினோம். 'நரசுஸ் காபியுடன் தான் விடியும்' என்ற நிலைக்கு மக்கள் மனம் மாறிய நிலையில், தமிழகம் முழுதும் கிளைகளை அதிகப்படுத்தினோம். 1993ல் சிக்கரி கலந்த, 'உதயம்' காபியை அறிமுகப்படுத்தினோம். அந்த காலகட்டத்தில், சில பன்னாட்டு நிறுவனங்கள் உடனடியாக தயாரிக்கும், 'இன்ஸ்டன்ட்' காபியை அறிமுகப்படுத்தின. பில்டர் காபி போல் அல்லாமல் இது தயாரிப்பதற்கு எளிதாக இருந்ததால், அதன் பயன்பாடு அதிகரித்தது. எனவே, ஓராண்டு கடும் உழைப்பிற்கு பின், நாங்களும் இன்ஸ்டன்ட் காபி சந்தையில் வெற்றிகரமாக நுழைந்தோம். கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு, குஷால்நகர், கேரளாவின் வயநாடு, தமிழகத்தின் ஏற்காடு, திண்டுக்கல் மற்றும் ஆப்ரிக்கா, பிரேசில், இந்தோனேஷியா நாடுகளில் இருந்து காபி கொட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு, சேலம் மற்றும் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள வீராணம் ஆகிய இரு இடங்களில் உள்ள ஆலைகளில் நரசுஸ் காபி துாள் தயாராகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுதும் 81 கிளைகள் மற்றும் பெங்களூரில் ஒரு கடை என, 'நெட்வொர்க்' வைத்துள்ளோம். வினியோகஸ்தர்கள் மட்டுமின்றி, சொந்த இணையதளம், ஏனைய வர்த்தக தளங்கள் மூலமாகவும் காபி துாள் விற்பனை செய்யப்படுகிறது. டில்லி, மும்பை போன்ற பெருநகர சந்தைகளிலும் நரசுஸ் விற்பனை அதிகரித்துள்ளது. தமிழக காபி சந்தையில், 40 சதவீத இடத்தை தக்க வைத்துள்ளது நரசுஸ் நிறுவனம். 2025 --- -26-ல், 641 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளோம். ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் வர்த்தகம் என்ற இலக்கை நோக்கி விரைந்து செல்கிறோம்.