திருப்தியான வருமானம் கிடைக்கிறது!: தொழிலை நாம் வளர்த்தால் அது நம்மை வளர்க்கும்!
பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும், காஞ்சிபுரம் மாவட்டம், நந்திவர்மன் மதி மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரான செல்வி:மொத்தம், 1,500 பெண்களான நாங்கள் அனைவருமே விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவங்க. விவசாயம் என்பது நாளுக்கு நாள் நலிவை சந்திக்கிற தொழிலாக மாறியது. எங்களுக்கு வேறு வேலையும் தெரியாது.விவசாயத்தை மீட்டெடுக்கணும். பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர்ற மாதிரியான விஷயங்களை செய்யணும், எங்களோட விளைபொருட்களுக்கு நல்ல விலையும் கிடைக்கணும் என்ற மூன்று இலக்குகள் குறித்து யோசித்தோம்.ஒவ்வொரு விவசாயக் குழுவும், அவங்கவங்க உற்பத்தி செய்யும் பொருட்களை இடைத்தரகர்கள் வாயிலாக விற்று வந்தோம். முதலில் இதை மாற்ற வேண்டும் என முடிவெடுத்து, சுற்றுவட்டாரத்தில் இருக்குற எல்லா விவசாய குழுக்களையும் ஒன்று சேர்த்தோம். இதன் வாயிலாக, நிறைய பொருட்களை ஒரே இடத்தில் விற்பனை செய்ய முடிந்தது. ஒரு பிராண்டாகவும், நிறுவனமாகவும் மாற்றினோம். இதற்கு வெற்றியும் கிடைத்தது.எங்களோட உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 73 ஊராட்சிகளை சேர்ந்த 1,500 விவசாயக் குடும்ப பெண்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். பலரும் பள்ளிப் படிப்பைகூட முடிக்காதவர்கள். நிறுவனம் ஆரம்பித்த பின், எங்களது பொருட்களை நாங்களே மதிப்புக்கூட்டல் செய்து விற்பனைக்கு அனுப்புகிறோம். தற்போது, எங்களுக்கு சந்தை விலையும் தெரிகிறது. மக்களின் தேவையும், விருப்பமும் தெரிகிறது.நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வகைகளையும், உளுந்து, கேழ்வரகு, பச்சைப்பயறு, கம்பு போன்ற சிறுதானியங்களையும் விவசாயிகளிடம் இருந்து வாங்கி, தரம் பிரித்து, சுத்தமாக்கி, 'பேக்கிங்' செய்து விற்பனைக்கு அனுப்புகிறோம்.நிறத்துக்காகவோ, வாசனைக்காகவோ எந்த ரசாயனமும் சேர்ப்பதில்லை. இதற்காக, உணவு கட்டுப்பாட்டு துறையில் இருந்து தரச்சான்றிதழ் வாங்கி இருக்கிறோம். மேலும், இயற்கை விவசாயிகளிடம் இருந்து மட்டுமே பொருட்களை வாங்குகிறோம்; அதனால் தான் மக்கள் எங்களை நம்பி வாங்குகின்றனர். கடனில் இருந்து எங்கள் நிலங்களை இந்த நிறுவனம் வாயிலாக, மீட்டு எடுத்து உள்ளோம். தற்போது, மாதம் ஒன்றுக்கு, 3 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' பண்றோம்.கிடைக்கும் லாபத்தை அவங்கவங்க உழைப்புக்கு ஏற்றார்போல் பிரித்துக் கொள்கிறோம். இடைத்தரகர்கள் இல்லாததால், எங்களுக்கு திருப்தியான வருமானம் கிடைக்கிறது. தொடர்புக்கு: 84898 00308.
தொழிலை நாம் வளர்த்தால் அது நம்மை வளர்க்கும்!
'ஷர்ட்' தயாரிப்பில் இறங்கி சாதித்துள்ள, புதுக்கோட்டை, பொன் நகரைச் சேர்ந்த காயத்ரி:நான் பி.இ., எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் பட்டதாரி. 2013ல் பொறியியல் பட்டதாரியுடன் திருமணம் நடந்தது. அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை இரண்டு முறை எழுதியும் தேர்வாகாத சூழலில் பிசினஸ் ஐடியா வந்தது. என் மாமனார் ரயில்வே பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்.கடந்த 40 ஆண்டு களாக அவருக்கு தையல் தான் பொழுதுபோக்கு. என் மாமியாருக்கும் அதில் ஈடுபாடு உண்டு. எனவே, 'நாம் தையல் சம்பந்தப்பட்ட தொழில் செய்தால் என்ன?' என்று கணவரிடம் தெரிவித்தேன்.கொரோனா ஊரடங்கில் என் யோசனை உருப்பெற்றது. புதுக்கோட்டையில் கார்மென்ட்ஸ் குறைவு. மணப்பாறை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் தான் பிராண்டட் ஷர்ட் கம்பெனிகள் இருந்தன.இதையெல்லாம் கணக்கு போட்டு, எங்கள் மகன் பெயரில் கவின் ஷர்ட்ஸ் என்ற பிராண்ட் பெயருடன், சட்டைகளை தயாரிக்கும் கம்பெனியை, எங்கள் வீட்டிலேயே துவக்கினோம்.தமிழக அரசின், 'நீட்ஸ்' திட்டம் வாயிலாக, 25 சதவீத மானியத்துடன் கூடிய 14.50 லட்சம் ரூபாய் கடன் பெற்றோம். எங்களிடம் அப்போது முதலீடாக, 72,500 ரூபாய் இருந்தது. அதையும் போட்டோம்.ஷர்ட் தைப்பதில் எங்களுக்கென ஒரு பிரத்யேக, 'பேட்டர்ன்' உருவாக்கினோம். 60 டிசைன்களில் ஷர்ட்கள் தயாரித்தும், ஆறு மாதங்கள் வரை மார்க்கெட்டை பிடிப்பதில் சிரமம் இருந்தது.கணவரின் நண்பர்கள் வாயிலாக பள்ளி, கல்லுாரி, தனியார் கம்பெனி ஊழியர்களுக்கு யூனிபார்ம் தைக்கும் ஆர்டர்கள் பக்கம் கவனத்தை திருப்பினோம்.அதேபோல், திருமண நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் மத்தியில் ஒரே மாதிரி ஷர்ட் அணிவது டிரெண்டாக இருந்ததால், அவர்களை அணுகி, அந்த ஆர்டர்களை பெற்றோம்.அதன்பின், 'கவின் அப்பாரல்ஸ்' என்ற எங்களது ரெடிமேட் ஷோரூமை 2022ல் துவக்கினோம். இப்போது அந்த கடைக்கு ஆயிரக்கணக்கான தொடர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இப்போது பேன்ட்களை தைத்து மட்டுமே கொடுக்கிறோம்.வெளியில் எம்.ஆர்.பி., 850 ரூபாய் வரை விற்கப்படும் எங்கள் சட்டைகளை இடைத்தரகர்கள் இல்லாமல், நாங்களே விற்பதால், 500க்கும், மொத்தமாக வாங்குகிறவர்களுக்கு 350க்கும் கொடுக்கிறோம். ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்கிறோம்.என் ஆசான்கள், 'தொழிலை ஆரம்பிக்கும்போது அதை குழந்தை போல் பாவித்து, நாம் வளர்க்க வேண்டும். அக்குழந்தை வளர்ந்த பின், அது நம்மை வளர்க்கும்' என்று கூறினர்.தொடர்புக்கு:99421 14881