'ரீல்ஸ்' போட்டு சோஷியல் மீடியாவில், 'டிரெண்ட்' ஆகியுள்ள தாய், மகளான ஜான்சி, தீக் ஷி.ஜான்சி: என் சொந்த ஊர் தேனி. எனக்கு 19 வயசுலேயே கல்யாணம் ஆகிடுச்சு. இப்போது எனக்கு, 32 வயது. சொந்தக்காரரையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா, மூணே மாசத்துல திட்டு, அடி, உதைன்னு ஆரம்பிச்சுட்டாரு. சில நேரங்களில் ரத்தம் வரும் அளவுக்கு அடிப்பாரு.சென்னையில, ஏதாவது வேலைக்கு போகலாம்னு முடிவு எடுத்தபோது, அவரும் என் கூடவே வந்துட்டாரு. சென்னைக்கு வந்தும் அடிக்கிறதை நிறுத்தலை. நான் கர்ப்பம் ஆனேன். அதை கலைக்க சொல்லி அடிச்சாரு. என்ன ஆனாலும் சரி, குழந்தையை கலைக்க மாட்டேன்னு அடி, உதையை தாங்கிட்டு இவளைப் பெற்றேன். அப்புறம் கரசில் பி.காம்., படித்தேன். நான் இயல்பிலேயே பயந்த சுபாவம். ஒரு கட்டத்துல பிரச்னை எல்லை மீற, 'நீங்க எனக்கு அம்மாவாவும், அப்பாவாவும் இருக்கீங்க. எனக்கு நீங்க மட்டும் போதும்'னு தீக் ஷி சொன்னபோது தான் அவர் வேணாம்னு முடிவு எடுத்து டைவர்ஸ் அப்ளை பண்ணேன்.பேங்க் வேலை, டெலிகாலர் வேலையெல்லாம் பார்த்துட்டு, இப்போ ஒரு கம்பெனியில் மேனேஜராக இருக்கேன். பட்ட கஷ்டத்துக்கெல்லாம் சேர்த்து, இப்போது சந்தோஷமா இருக்கோம். இதற்கு, என் மகள் தான் காரணம்.தீக் ஷி: 'எனக்கு அக்காவா' என இப்போது யார் கேட்டாலும், அம்மா என்ஜாய் பண்ண துவங்கிட்டாங்க. எனக்கு நினைவு தெரிய ஆரம்பிச்சப்ப கூட அப்பாவிடம் அடி, உதைன்னு இருந்ததை பார்த்துஇருக்கேன்.குடிச்சுட்டு ரோட்டில் கிடக்கிற அப்பாவை போலீஸ்காரங்க வீட்டில் விட்டுட்டு போவாங்க. எனக்கு அதெல்லாம் பயமாக இருக்கும்.அம்மா என்னை, 'டே கேரில்' விட்டுட்டு வேலைக்கு போவாங்க. இப்போது வரை அம்மா தான் எனக்கு எல்லாம்.நான் நாலாவது படிக்கும்போது பண்ணிய, 'டிக்டாக்' வீடியோவை பார்த்து சீரியல்களில் நடிக்க கூப்பிட்டாங்க. அப்படி துவங்கியது என் மீடியா என்ட்ரி. செஞ்சி, குலுகுலுனு நிறைய படங்கள் பண்ணியிருக்கேன். இப்போது, இந்தியன் - 2 படத்தில் அனிமேஷன் கேரக்டர்லயும் நடிக்கிறேன். படிப்புலயும் நான் டாப்பர் தான்.என்னோட அடுத்த பிளான், அம்மாவுக்கு கல்யாணம் பண்ணனும். இத்தனை ஆண்டுகளாக அம்மா, எனக்காகவே இருந்துட்டாங்க. இனி, கொஞ்சம் அவங்க லைப்பையும் பார்க்கட்டும். நான் மாப்பிள்ளை எல்லாம் பாத்து வெச்சுட்டேன்.ஆனா, அம்மாவோ, 'எனக்கு கணவர் வேண்டாம். இவளுக்கு ஒரு அப்பா வேணும். அப்படி ஒருத்தர் கிடைச்சா, இன்னும் இரண்டு ஆண்டு கழித்து கல்யாணம் பண்ணிப்பேன்'னு சொல்றாங்க.