உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / இயற்கை விவசாயத்தில் ஆத்ம திருப்தி!

இயற்கை விவசாயத்தில் ஆத்ம திருப்தி!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி அமுதா: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடிதான் என் சொந்த ஊர். சிறு வயது முதலே விவசாயத்தில் அதிக ஆர்வம் உண்டு. பள்ளி விடுமுறை நாட்களில், அப்பாவுக்கு உதவியாக விவசாய வேலைகள் செய்வேன். திருமணம் ஆனதும், கணவர் ஊரான அருப்புக்கோட்டையில் வசிக்க ஆரம்பித்தேன். வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர், ஏழு ஆண்டுகளுக்கு முன், 4 ஏக்கர் நிலம் வாங்கினார். விவசாயம் செய்யும் எண்ணத்தில் வாங்கவில்லை; எதிர்காலத்துக்கான முதலீடாகத்தான் வாங்கினார். 'துாத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இந்த நிலம் அமைந்திருப்பதால், சில ஆண்டுகளுக்கு பின், இங்கே ஒரு ஹோட்டல் தொடங்கலாம்' என்ற யோசனை கணவருக்கு இருந்தது. ஆனால், நான் விவசாயம் செய்ய ஆசைப்பட்டேன். இந்த நிலத்தில் ஆற்று பாசனம், போர்வெல் வசதி கிடையாது. மானாவாரியாக ஏதாவது சாகுபடி செய்யலாம் என நினைத்தேன். 'எலுமிச்சை சாகுபடி செய்யலாம்' என, கணவர் கூறினார். 3 ஏக்கர் பரப்பில், இயற்கை முறையில், நாட்டுரக எலுமிச்சை சாகுபடி செய்து, ஒன்றரை ஆண்டுகளாக மகசூல் எடுத்து, கணிசமான லாபம் ஈட்டி வருகிறேன். 1 ஏக்கருக்கு, 125 மரங்கள் வீதம், 3 ஏக்கரில் மொத்தம், 375 எலுமிச்சை மரங்கள் இருக்கின்றன. தண்ணீரை சிக்கனப்படுத்தவும், எல்லா மரங்களுக்கும் சீரான முறையில் தண்ணீர் கிடைக்கவும் சொட்டுநீர் பாசனம் அமைத்திருக்கிறேன். கடந்தாண்டு, 375 மரங்கள் வாயிலாக 12,800 கிலோ பழங்கள் மகசூல் கிடைத்தது. அதன் விற்பனை வாயிலாக கடந்தாண்டு, 3 லட்சத்து, 61,500 ரூபாய் வருமானம் கிடைத்தது. இதில் இடுபொருள், அறுவடை, போக்குவரத்து மற்றும் இதர செலவுகள், 88,000 ரூபாய் போக, 2 லட்சத்து, 73,500 ரூபாய் லாபம் கிடைத்து. எங்கள் தோட்டத்தில் விளைகிற எலுமிச்சை பழங்களை, ஒரே சந்தையில் விற்பனை செய்தால் வியாபாரிகள் விலையை குறைக்க வாய்ப்பு அதிகம். அதனால், பக்கத்து ஊர்களில் உள்ள சந்தைகளுக்கும் விற்பனைக்கு அனுப்புகிறேன். இயற்கை முறையில் சாகுபடி செய்வதால், கூடுதல் விலை கிடைப்பதில்லை. அதே நேரம், ரசாயன, நச்சுத்தன்மை இல்லாத பழங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறேன் என்ற ஆத்ம திருப்தி கிடைக்கிறது. இயற்கை விவசாயம் செய்வதால் உற்பத்தி செலவு குறைவதோடு, மண் வளமும் மேம்படுகிறது! தொடர்புக்கு: 97889 66786


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை