உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  பொம்மலாட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு பாடம்!

 பொம்மலாட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு பாடம்!

கற்றலை இனிமையாக்கும் வழிகளை கூறும், சென்னையைச் சேர்ந்த பொம்மலாட்ட கலைஞர் இசை பிரகாஷ்: குழந்தை களின் உலகம் மிகவும் அற்புதமானது; கற்பனை திறன் நிறைந்தது. அவர்கள் உலகத்தில் பயணிக்க ஆரம்பித்தால், புதுப்புது விஷயங்களை நமக்கு கற்று கொடுப்பர். நாம் செய்ய வேண்டியது, அந்த உலகத்தை முழுமையாக ரசிப்பது மட்டுமே! சென்னையில் பிறந்து வளர்ந்தேன். தனியார், 'டிவி' நிகழ்ச்சி தயாரிப்பாளராக, இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன். வாழ்க்கையில் சுவாரஸ்யமே இல்லாத மாதிரி தோன்றியது. ஒரு மாற்றம் தேவைப்படவே, ஆவணப் படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். என் அனுபவங்களை, அரசு பள்ளி குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ள, ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவம் மனதுக்கு சந்தோஷத்தை கொடுத்தது. அதனால், பள்ளிகள் மட்டுமின்றி, எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் குழந்தைகளிடமும் பேசி, அவர்களுக்கு பல புதிய தகவல்களையும் கற்றுக் கொடுக்க முடிவெடுத்தேன். கதை சொல்லல், பாட்டு, விளையாட்டு, நாடகம் என, நிறைய விஷயங்களை கற்று, குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். நாகப்பட்டினத்தில் பயிற்சி பட்டறை நடத்தினோம். கதைகள் சொல்லி, அதில் வரும் கதாபாத்திரங்களை, குழந்தைகளை வரைய சொன்னேன். குட்டிப் பையன் ஒருவன், 'பட்டாம்பூச்சிக்கு உயிர் வந்துருச்சு...' என, கத்தினான். பக்கத்தில் சென்று பார்த்தபோது, அவன் வரைந்த பட்டாம்பூச்சியை வெட்டி, ஒரு குச்சியில் ஒட்டி, வெளிச்சத்தில் ஆட்டினான். அதை நிழலில் பார்க்கும்போது, பட்டாம்பூச்சி பறப்பது போல் இருந்தது. அவனிடம் கற்றுக் கொண்டது தான், பொம்மலாட்டக் கலை. அதை அடிப்படையாக வைத்து, வெவ்வேறு உருவங்கள் வாயிலாக, எப்படியெல்லாம் குழந்தைகளுக்கு தகவல்களை சொல்லிக் கொடுக்க முடியும் என யோசித்தேன். கை பொம்மலாட்டம், தடி பொம்மலாட்டம் போன்றவற்றுக்கான உருவங்களை உருவாக்கி, நிகழ்ச்சிகள் நடத்த ஆரம்பித்தேன். எண்களை கதாபாத்திரங்களாக மாற்றி, கணிதத்தை கூட கலை வழியாக கற்பிக்க முடியும். சமூக அறிவியலில், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றிய பாடத்தை நாடகமாக நடத்தச் செய்வது, ஆங்கிலம் கற்பிக்கும் போது, வடிவேலு, விவேக் போன்ற நகைச்சுவை நடிகர்களின் பிரபலமான வசனங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொல்வது என, கற்பித்தல் முறைகளை எளிமைப் படுத்தினேன். 'டீச் பார் இந்தியா' என்ற இயக்கத்துடன் சேர்ந்து, மூன்று ஆண்டுகள், அரசு பள்ளி குழந்தைகளுக்காக வேலை பார்த்தேன். பாடங்களை எப்படி சுலபமாக சொல்லி கொடுக்கலாம் என, அரசு பள்ளி ஆசிரியர்கள், 30 பேருக்கு பயிற்சி கொடுத்துள்ளேன். என் பயணம் தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !