உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  விளையாட்டு சொல்லி தரும் ஒழுக்கம்!

 விளையாட்டு சொல்லி தரும் ஒழுக்கம்!

பீரங்கி குண்டு போன்ற கனமான பந்தை வைத்து விளையாடும், 'கெட்டில்பெல்' போட்டியில், 23 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், தங்கப்பதக்கம் பெற்ற முதல் இந்திய வீராங்கனையான, கோவையைச் சேர்ந்த, 26 வயதான கேஷ்னி: எடை குறைப்புக்காக உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்திருந்தேன். ஒரு நாள், 'ஜிம்'மில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக ஒரு பயிற்சியாளர் வந்திருந்தார். அவர் தான், 'எடை குறைக்க, கெட்டில்பெல் முயற்சி செய்து பாருங்க' என்று கூறினார். எங்கள் வீட்டில் ஏற்கனவே எனக்கு கடும் எதிர்ப்பு இருந்தது. 'உடற்பயிற்சி செய்தால் தோற்றம் மாறிடும்; திருமணமாகாது' என்று பயந்தனர். இன்னும் சிலர், 'கெட்டில்பெல் ஆண்களின் விளையாட்டு' என்று கூறினர். 'உன்னால் முடியுமா?' என்ற கேள்வியும், 'ஏன் முடியாது' என்ற எதிர்கேள்வியும் மனதிற்குள் எழுந்தன. 'கெட்டில்பெல்' என்பது, கைப்பிடியோடு இருக்கும் பீரங்கி குண்டு மாதிரி இருக்கும்; மிகவும் கனமாக இருக்கும். கெட்டில்பெல்லை பல முறை மேலே துாக்கி, கீழே கொண்டு வந்து, பயிற்சியாக செய்வர். ரஷ்யாவில் உருவான இந்த பயிற்சி தான், போட்டி விளையாட்டாகவும் இருக்கிறது. ஆர்வமாக பயிற்சியை ஆரம்பித்தாலும், அது மிகவும் கடுமையாக இருந்தது. உடல் வலி, தலைவலியால், பயிற்சி செய்வதையே விட்டு விடலாமா என்று நினைக்கும் அளவுக்கு சிரமமாக இருந்தது. சர்வதேச போட்டிகள் நெருங்கிய சமயத்தில், பயிற்சிகள் இன்னும் கடுமையாக மாறின. உடல் சோர்வும், மனச்சோர்வும் தாங்க முடியவில்லை. 'நான் போட்டிக்கு செல்ல மாட்டேன்' என்று பெற்றோரிடம் சொல்லி அழுதேன். ஏனெனில், அதற்கு முன் நான் பங்கேற்ற ஐந்து போட்டிகளிலும் தோற்றிருந்தேன். 'நீ பங்கேற்றாலே போதும்... வெற்றி, தோல்வி குறித்து நினைக்காதே' என்று பெற்றோர் தைரியமூட்டினர். ஆறாவது முறையாக பங்கேற்று, முதல் பரிசு ஜெயித்து, நம் தேசியக் கொடியை ஏந்தி நின்ற அந்த நிமிடத்தை இப்போதும் மறக்க முடியாது. பயிற்சியாளர் விக்னேஷ் ஹரிஹரனுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். நான் நம்பிக்கை இழந்த போதெல்லாம், நல்ல குருவாக வழி நடத்தினார். அவர் கொடுத்த ஊக்கமே, எனக்கு தைரியமாக மாறியது. ஆசிய அளவில் ஒரு முறையும், தேசிய அளவில் ஒரு முறையும் பதக்கம் வென்று, சாதனை படைத்துள்ளேன். இப்போது, 'கிரேட் பிட்னெஸ்' என்ற பயிற்சி மையத்தை நடத்தி வருகிறேன். பெண்களுக்கு பயிற்சி அளிப்பது என் முக்கியமான இலக்கு. கெட்டில்பெல் மாதிரி ஏதாவது ஒரு விளையாட்டை எல்லாருமே கற்றுக் கொள்ள வேண்டும். விளையாட்டு சொல்லிக் கொடுக்கும் ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும் வேறு எதுவுமே சொல்லித் தராது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை