மேலும் செய்திகள்
குற்றங்களை மறைக்கும் போலீசால் புலம்புது சிட்டி
24-Jun-2025
திருநெல்வேலி மாவட்டம், சிவந்திப்பட்டி கிராமத்தில் உள்ள, 'ஸ்ரீ குமரன் டீ ஸ்டால்' உரிமையாளர்களான குமரன் - ராஜலட்சுமி தம்பதி:ராஜலட்சுமி: எங்களுக்கு சொந்த ஊரே சிவந்திப்பட்டி தான். காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து, அரை வயிற்றுக் கஞ்சியை குடித்துவிட்டு, துாத்துக்குடி மாவட்டத்தில் கொத்தனார், சித்தாள் வேலைகளுக்கு கிளம்பி விடுவோம். நாள் முழுக்க அயராமல் வேலை பார்த்து, கொடுக்கிற கூலியை வாங்கி, சோர்ந்து போய் வீட்டிற்கு வருவோம். அந்த காசு தான் குடும்பத்துக்கு சோறு போட்டது.சாப்பாட்டு செலவு, வீட்டு செலவு என ரூபாய் செலவாகிடும். உடல்நிலை சரியில்லை எனில், மருத்துவமனை செல்வதற்குக்கூட கையில் ரூபாய் இருக்காது. உடல்நிலை சரியில்லை என்றாலும், வேலைக்கு செல்லத்தான் நினைப்போம். ஏனெனில், வேலைக்கு செல்லவில்லை எனில், மறுநாள் பட்டினிதான்.குமரன்: ஏதாவது சிறுதொழில் துவங்கினால் தான், வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று முடிவெடுத்து, காய்கறி வாங்கி விற்க ஆரம்பித்தோம். அதில் போக்குவரத்திற்கே அதிகமாக செலவானதால், நாங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. சில நேரங்களில் காய்கறி அழுகி, நஷ்டமும் ஏற்பட்டது. நஷ்டத்தில் இருந்து மீண்டு, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த காலத்தில்கூட, மீண்டும் கூலி வேலைக்கு மட்டும் செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அதனால், ஓலைப்பந்தலுக்கு அடியில் சிறிய தள்ளுவண்டி கடையில், சுக்கு காபி, இஞ்சி டீ, வடை என்று போட்டு விற்க ஆரம்பித்தோம். முதலில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வியாபாரம் சிறப்பாக இல்லை; ஆனாலும் மனம் தளராமல் கடை போட்டோம்.எங்களிடம் டீ, காபி வாங்கி குடித்தவர்கள், பலகாரம் சாப்பிட்டவர்கள், 'அருமையாக இருக்கிறது' என்று எங்களிடமும், ஊருக்குள்ளும் சென்று சொல்ல, வியாபாரம் சூடு பிடித்தது.தொழிலில் ஓரளவு வளர்ச்சி வர, 'ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்' போட்டோம். தற்போது எங்கள் கடைக்கு ஒரு நாளைக்கு, 70க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வருகின்றனர். கூலி வேலைக்கு சென்று வறுமையுடன் போராடிய நாங்கள், தற்போது இந்த தொழிலில் ஐந்து மணி நேரத்தில் 1,800 ரூபாய் வரை வருமானம் பார்க்கிறோம்.காய்கறி வியாபாரத்தை மூடியபோது, 'இனி முடியாது' என்று மனசு விட்டு போயிருந்தால், மறுபடியும் நாங்கள் கூலி வேலைக்கு தான் சென்று இருப்போம். எங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமும் நடந்திருக்காது. அதனால், 'நம்மால் முடியும்' என்று நம்புவது தான் வெற்றிக்கான முதல் படி!
24-Jun-2025