வாரத்துக்கு 10,000 ஆடுகள் விற்க இலக்கு!
தமிழகம் முழுதும் ஆடுகள் விற்பனை செய்து வரும், சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்த அப்பாஸ்: நானும், என் நண்பர்களும் கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் படித்தோம். நாங்கள் நான்கு பேரும் படிப்பு முடித்ததும், எங்களுக்கு ஆட்டு இறைச்சி விற்பனை செய்யும் யோசனை வந்தது. ஆட்டிறைச்சி விற்பனையை உயர் தொழில்நுட்பத்துடன், தரமாக, 'டிஜிட்டலைஸ்' செய்ய முடிவு எடுத்தோம். முதலில் சென்னை குரோம்பேட்டையில் சில்லரை விற்பனை கடையை திறந்து, ஆட்டிறைச்சி, மீன், சிக்கன் மூன்றும் விற்பனை செய்தோம்; மாதம், 25 லட்சம் ரூபாய் வரை பிசினஸ் நடந்தது. ஆனால், இறைச்சிக்காக ஆடு வாங்குவதில் நிறைய பிரச்னைகள் இருந்தன. அனுபவமில்லாத எவராலும் விலையை கண்டுபிடிக்கவே முடியாது. தரத்தை தீர்மானிக்கிற வழியும் இல்லை. அதனால், ஆடுகள் விற்பனை பிசினசில் இறங்க முடிவு செய்தோம். ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, பீஹார், ம.பி., - உ.பி., மாநிலங்களில் இருந்து தான் நம்மூருக்கு வெள்ளாடுகள் வருகின்றன. சென்னையில் உள்ள கறிக்கடைக்காரர்களிடம் பேசி ஒருங்கிணைத்தோம். முதற்கட்டமாக ராஜஸ்தான் சென்று, 300 ஆடுகள் வாங்கி வந்தோம். இரு நாட்களில் அனைத்தும் விற்பனையாகி விட்டன. இரண்டாவது முறையும், 300 ஆடுகள் வாங்கினோம். அவையும் விற்பனையாகி விட்டன. ஆனால், இரண்டு முறையும் நஷ்டம் தான் ஏற்பட்டது. காரணங்களை தேடியதில், விலை தீர்மானிப்பதிலும், தரம் பார்ப்பதிலும் பிரச்னை இருந்தது. படிப்படியாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம். வயது, எடை, தரம் என, 28 தர நிலைகளை நாங்களே வடிவமைத்தோம். ஆடுகள் வாங்கும் மாநிலங்களில் கலெக் ஷன் சென்டர் அமைத்து, கொள்முதலுக்கு ஆட்களை நியமித்தோம். தகவல் பரிவர்த்தனைக்கு நாங்களே, 'ஆப்' ஒன்றை உருவாக்கி, மொத்த வணிகத்தையும் நிர்வகித்தோம். எங்களிடம் உள்ள ஒவ்வொரு ஆட்டின் கழுத்திலும், 'டேக்' இருக்கும். அதில் இருக்கும் பார்கோடு குறியீட்டை ஸ்கேன் செய்தால் எடை, வயது, விலை என, 28 தகவல்களும் வந்துவிடும்; பேரமே இல்லை. வாரத்திற்கு மூன்று நாட்கள் ஆடுகள் வந்து இறங்கும்; அன்று மாலையே அனைத்தும் விற்பனையாகிவிடும். இந்த ஆண்டு இறுதிக்குள் நெல்லை, கன்னியாகுமரி, சேலம், திருச்சி, பெங்களூரில் வினியோக மையங்கள் திறக்க இருக்கிறோம். வாரம், 10,000 ஆடுகள் விற்பனை செய்ய இலக்கு வைத்து உள்ளோம். தமிழகம் முழுதும் இப்போதைக்கு, 200 வாடிக்கையாளர்கள் உள்ளனர்; அதை, 700 ஆக மாற்ற வேண்டும். அடுத்து, 100 இறைச்சி கடை உரிமையாளர்களுடன் சேர்ந்து, விற்பனையை ஹைடெக்காக மாற்றும் திட்டமும் வைத்துள்ளோம்.