உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / நதி போல ஓடிக் கொண்டிருக்கும் மூதாட்டி!

நதி போல ஓடிக் கொண்டிருக்கும் மூதாட்டி!

மொழியியல் ஆராய்ச்சியாளரான, விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த, 90 வயதை கடந்த மூதாட்டி கமலா: என் சிறு வயதில் எங்கள் குடும்பம் மும்பையில் இருந்தது. என், 16 வயதில் அப்பா தவறி விட்டார். எல்லாமே தலைகீழாக மாற, சொந்த ஊரான விருதுநகருக்கு வந்து விட்டோம். கல்லுாரி படிப்பு, முனைவர் பட்டம் என முடித்தேன். இடைநிலை ஆசிரியர், பேராசிரியர், தமிழ்த்துறை தலைவர் என, 40 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் மனநிறைவுடன் பயணித்தேன். பணி நிறைவுக்கு பின், வாசிப்பை தீவிரப்படுத்தினேன். வாழ்க்கை சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்தபோது, 69வது வயதில் மார்பக புற்றுநோய் இருந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். அது, என் மன தைரியத்திற்கான ஒரு சோதனை என நினைத்து, இன்னும் தைரியமானேன். முறையான சிகிச்சையை முழுமையாக முடித்துவிட்டு, மறுபடியும் வாசிப்பு, ஆராய்ச்சி என அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தேன். இப்போது நான், 30 புத்தகங்களின் ஆசிரியர். மதுரை, அரசு ராஜாஜி மருத்துவமனை புற்றுநோய் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு, பாடல்கள் வாயிலாக சிகிச்சை கொடுத்து வருகிறேன். புற்றுநோய் நோயாளிகளுக்கு மன உறுதி முக்கியம். அப்போது தான் எல்லா சூழல்களையும் கடந்து வர முடியும். என் அனுபவங்களை சேர்த்து எழுதி, ஐந்து புத்தகங்களை வெளியிட்டேன். அப்படி நான் எழுதிய, 'ரோஜாவுக்கு' புத்தகத்தை, 3,000 பேருக்கு இலவசமாக கொடுத்து இருக்கிறேன். கடந்த, 2017ல் பெங்களூரு ஹெச்.சி.ஜி., மருத்துவமனை, புற்றுநோயை வென்றோருக்கு அகில இந்திய அளவில் போட்டி நடத்தியது. அதில், என் நோய் மீளல் அனுபவத்தையும், அதற்கு பிறகான என் சாதனைகளையும், ஒரு நிமிட வீடியோவாக அனுப்பி, முதல் பரிசான, 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான, இருசக்கர வாகனத்தை வென்றேன். இதுவரை நான் வாசித்த புத்தகங்கள் எல்லாம் பல பெட்டிகளில் இருக்கின்றன. அவை, 4 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ளது. அதெல்லாம் வீணாக கூடாது என, மாணவர்களுக்கு சிறிது சிறிதாக அனுப்பி வருகிறேன். என் உடலை, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தானமாக கொடுக்க எழுதி வைத்து விட்டேன். இன்னும் சில மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் தொல்காப்பிய மாநாட்டிலும் பங்கேற்க இருக்கிறேன். இந்த, 90 வயதிலும் தினமும் ஆறு மணி நேரம் புத்தகங்கள் படிக்கிறேன். குறைந்தது, 20 பக்கங்கள் எழுதுகிறேன். என் வேலைகளை நானே செய்து கொள்கிறேன். நதி போல் ஓடியபடியே இருப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை