உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / ஜெயிப்பதற்கு ஒற்றை வழி இருந்தாலும் போதும்!

ஜெயிப்பதற்கு ஒற்றை வழி இருந்தாலும் போதும்!

'எஸ்.எம்.எஸ்., பேக்ஸ்' என்ற பெயரில், தாம்பூலப் பை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான பை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வரும், தஞ்சாவூர் மாவட்டம், மேட்டுத் தெருவைச் சேர்ந்த லோகநாயகி: திருமணத்துக்கு முன், நான் சிறிய அளவில் டெய்லரிங் தொழில் செய்து வந்தேன். என் கணவர், திருப்பூரில் பனியன் தொழிற்சாலையில் மேனேஜராக பணியாற்றினார். வருமானம் பற்றாக் குறையால், சமையலறைக்கு பயன்படக் கூடிய துணிகள் தயாரிப்பில் இறங்க முடிவெடுத்தோம். அதற்கான பயிற்சி வகுப்பை முடித்தேன்.டெய்லரிங் மிஷின், துணி உள்ளிட்டவை வாங்க வங்கியில், 5 லட்சம் ரூபாய் கடன் பெற்று, 'எஸ்.எம்.எஸ்., கார்மென்ட்ஸ்' என்ற கம்பெனியை ஆரம்பித்தோம். கரூரில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு மொத்தமாக கிச்சனுக்கு தேவையான ஏப்ரன், துண்டு, டீ மேட், கிளவுஸ் ஆகியவற்றை தயாரித்து கொடுத்தோம்.கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் எந்த பிரச்னையும் இல்லாமல் ஓடியது. 30 பெண்கள் வேலை செய்யும் அளவுக்கு எங்கள் கம்பெனியும் வளர்ச்சி கண்டிருந்தது. அப்போது, கரூரில் சாயக்கழிவு பிரச்னை திடீரென பெரிதாக வெடித்தது. இதனால், ஆர்டர் கிடைக்காமல் தொழில் முடங்கியது; பல மாதங்களாக இப்படியே தொடர, கடன் வாங்கி சமாளித்தோம். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல், வேலையை விட்டு நிறுத்தினோம். எல்லாம் கைநழுவி கொண்டிருந்த நேரத்தில், கடன் நிவர்த்தி தலமான, திருச்சேறை கோவிலுக்கு சென்றிருந்தோம். தெய்வம் துணை நிற்கும். வழியை நாம் தானே கண்டறிய வேண்டும். அந்த கோவில் நிர்வாகத்தினரை அணுகி, பிரசாத பை ஆர்டரை பெற்றோம். அந்த பிரசாத பை ஆர்டரை தொடர்ந்து, ஓட்டு மிஷின்களை பாதுகாப்பாக வைப்பதற்கான பை தயாரிக்கும் ஆர்டர் கிடைத்தது. அதில் கணிசமான லாபம் கிடைக்க, கார்மென்ட்ஸ் கம்பெனியை, 'பேக்' கம்பெனியாக மாற்றினோம். தரம், நேர்த்தி, நேரத்துக்கு டெலிவரி ஆகியவை, எங்களுக்கு மீண்டும் மீண்டும் ஆர்டர்கள் கிடைக்க காரணமாக அமைந்தன. பழைய ஊழியர்களையே மீண்டும் பணி அமர்த்தி, வேலையை ஆரம்பித்தோம். தாம்பூல பை, ஜவுளி கடைகளுக்கான கட்டை பை, அரிசி பை என அனைத்து வகையான பைகளையும் செய்து, மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையில் விற்க ஆரம்பித்தோம். மார்க்கெட்டிங் விஷயங்களை கணவர் கவனிக்கிறார். எங்களிடம், 20க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்கின்றனர். 6 ரூபாய் முதல் 150 ரூபாய் வரைக்குமான பைகள் தயாரிக்கிறோம். அனைத்து செலவுகளும் போக மாதம் 75,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது. ஒரு தொழில் தோற்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதை ஜெயிக்க வைக்க ஒற்றை வழி இருந்தாலும் அதை பற்றிக்கொள்ள வேண்டும்.தொடர்புக்கு:97884 20950**************வழக்கத்தை விட கூடுதலான விளைச்சல்!கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள, ஸ்ரீகாரியம் பகுதியில் இயங்கி வரும், மத்திய கிழங்கு வகை பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின், முதன்மை விஞ்ஞானி சந்தோஷ் மித்ரா:'இன்டர்நெட் ஆப் திங்ஸ்' என்ற, 'இ - கிராப்' கருவியை 2014ல் உருவாக்கினேன். மண்ணின் ஈரப்பதம், தட்ப வெப்பநிலை, பயிர்களின் தன்மைகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இக்கருவி சேகரித்து, அதற்கேற்ப நீர் மேலாண்மை மற்றும் உர மேலாண்மை குறித்த ஆலோசனைகளை, விவசாயிகளின் மொபைல் போன்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும்.கிட்டத்தட்ட 4 அடி உயரம் கொண்ட இந்த கருவி, சோலார் பேனல், சென்சார் சாதனங்கள், இணையம், கணினி மென்பொருள் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வாயிலாக இயங்குகிறது. பயிர்களுக்கு நீர் மற்றும் உர மேலாண்மை குறித்து, தொடர்ச்சியாக ஆலோசனை வழங்குவதற்காகஇந்த கருவியை உருவாக்கினேன். அதன்பின் விவசாயிகளை சந்தித்து, இந்த கருவியின் செயல்பாடுகள் குறித்து விளக்கினோம். விவசாயிகளின், நிலம் குறித்த விபரங்களை இந்த கருவியில் பதிவு செய்தோம்.இக்கருவி வழங்கும் ஆலோசனைகளின்படி தங்களுடைய பயிர்களுக்கு நீர் மற்றும் உர மேலாண்மை மேற்கொள்ளுமாறு விவசாயிகளிடம் தெரிவித்தோம். இதை செயல்படுத்த ஊக்கத் தொகை தருவதாகவும் கூறினோம்; ஆனாலும், 'இது எந்த அளவுக்கு சாத்தியப்படும்; நஷ்டம் ஏற்பட்டால் என்ன செய்வது' என்று விவசாயிகள் தயங்கினர்.மிகுந்த நம்பிக்கை அளித்த பின், இக்கருவி வழங்கிய ஆலோசனைகளை செயல்படுத்தினர். வழக்கத்தைவிட கூடுதல் விளைச்சல் கிடைத்தது; அதேசமயம், உரங்களுக்கான செலவு, 50 சதவீதம் குறைந்திருந்தது. இது, விவசாயிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தது.இந்திய தோட்டக்கலை துறையில், 'மிகச் சிறந்த தொழில்நுட்பம்' என, இக்கருவி மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டது. மத்திய அரசும், மாநில அரசும் எனக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளன. இந்த கருவி, 20 சதுர கிலோ மீட்டர் பகுதியில் உள்ள பயிர்களை கண்காணித்து உரம் மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான ஆலோசனைகளை வழங்கும். ஊராட்சிக்கு ஒரு கருவி பொருத்தினால் போதும். இக்கருவியின் விலை 3 லட்சம் ரூபாய்.விவசாயிகள் பயன்படும் வகையில் இந்த கருவியை வாங்கி பயன்படுத்த, இங்குள்ள சில ஊராட்சிகளின் நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் ஒரு தனியார் நிறுவனம், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கருவி தயாரிப்பதற்கான உரிமம் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தினர், 'இ - கிராப்' கருவிகளை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர உள்ளனர். தொடர்புக்கு: 94951 55965.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ