உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / அனைவருக்கும் ஏற்ற விஷயங்கள் உலகில் நிறைய இருக்கின்றன!

அனைவருக்கும் ஏற்ற விஷயங்கள் உலகில் நிறைய இருக்கின்றன!

மேடை பேச்சில், 55 ஆண்டுகளை கடந்து, இன்றும் உலகம் முழுக்க வலம் வரும், 78 வயதாகும், 'முனைவர்' சாரதா நம்பி ஆரூரன்:நான் பிறந்தது தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில். தினமும் கோவிலுக்கு செல்வோம். அம்மா, கோவிலில் தினமும் பாடும் பாடல்கள் என் மனதில் பதிந்து, நானும் பாட ஆரம்பித்து விட்டேன். இசை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், பாட்டு கற்று கொண்டேன். அகில இந்திய வானொலியில், 'பி கிரேடு ஆர்ட்டிஸ்ட்'டாக இருந்திருக்கிறேன்.ராணி மேரி கல்லுாரியில், எம்.ஏ., முதலாண்டு படிக்கும்போது திருமணம் நடந்தது. நம்பி ஆரூரன் என் கணவர். லண்டனில் வரலாறு சார்ந்த ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள, என் கணவருக்கு பிரிட்டிஷ் கவுன்சில் உதவித்தொகை கிடைத்தது. குடும்பத்துடன் லண்டன் புறப்பட்டோம்.லண்டன் பி.பி.சி., வானொலியின், 'தமிழோசை' நிகழ்ச்சியில் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இசையையும், தமிழையும் இணைத்து, 1972 முதல் 1976ம் ஆண்டு வரை நான் வழங்கிய அந்த நிகழ்ச்சி, தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.சென்னை அருகேயுள்ள குன்றத்துார், பெரிய புராணத்தை எழுதிய சேக்கிழார் அவதரித்த தலம். அங்கு ஒவ்வொரு ஆண்டும் சேக்கிழார் விழா நடக்கும். ஒருமுறை சேக்கிழார் விழாவில் பேசுவதற்கு என் மாமனார் என்னை அழைத்தார். சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவ்விழாவிற்கு தலைமை வகித்தார்.பைரவி, ஆனந்த பைரவி, சஹானா போன்ற ராகங்களில் அற்புத திருவந்தாதி பாடல்களை பாடி, அதற்கான விளக்கத்தை நான் கொடுத்த விதம், ம.பொ.சி.,க்கு மிகவும் பிடித்து விட்டது. தமிழ் புலமை, இசையாற்றல் ஆகிய இரண்டையும் இணைத்து இசைப்பேருரை நிகழ்த்துமாறு அவர் என்னை ஊக்கப்படுத்தியது, என் வாழ்வின் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.தொடர்ந்து, 30 ஆண்டுகள் ராணி மேரி கல்லுாரியில் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்ற பின், தமிழக அரசின் தகவல் ஆணையராக, 2008 முதல் 2011 வரை பணியாற்றினேன். அந்த சமயத்தில், 3,000க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தமிழில் தீர்ப்பு வழங்கியதை மறக்க முடியாது.எனக்கு, 'சர்க்கரை வியாதி, பிரஷர்' கிடையாது. நன்றாக துாங்குவேன்; விரும்பியதை சாப்பிடுவேன். ஊர் சுற்றுவேன்; அரட்டையடிப்பேன். அதற்கு முக்கிய காரணம், தன்னம்பிக்கை. நாம் யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது. எந்த வயதிலும், அனைவருக்கும் ஏற்ற விஷயங்கள் இந்த உலகில் நிறைய இருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக ஜூலை சீசனுக்கு குற்றாலம் சென்று விடுவேன். அடுத்தடுத்த பணிகளை திட்டமிடுவேன். முடங்கினால் முதுமை சாபமாகிவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை