உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / ஆர்மோனியங்களை இந்தியா முழுதும் சப்ளை செய்யும் திட்டம் உள்ளது!

ஆர்மோனியங்களை இந்தியா முழுதும் சப்ளை செய்யும் திட்டம் உள்ளது!

ஆர்மோனியம் தயாரிக்கும் தொழில் செய்யும், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியைச் சேர்ந்த, 72 வயதான எஸ்.எம்.கணேஷ்: நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் தக்கலையில் தான். 1938-ல், என் தாத்தா சுப்பிரமணியன் ஆசாரியால் ஆர்மோனியம் தயாரிக்கும் பட்டறை துவங்கப்பட்டது. தாத்தாவுக்கு அப்புறம் அப்பா, அடுத்ததா நான் செய்கிறேன்.சங்கீதம் வாசிக்கவும் தாத்தா சொல்லி கொடுத்தார். ஒவ்வொரு கட்டைக்கும் ட்யூன் சரியா இருக்கணும். இல்லைன்னா சுருதி பேதம் வரும். ஆர்மோனியம் தயாரிக்க தேக்கு, 'பைன் உட்' மரங்களை பயன்படுத்துறோம். வெளிப்புற பெட்டியும், கட்டைகளும் தேக்குல பண்ணுகிறோம். 'லீட் போர்டு' முழுதும் பைன் உட்ல தயாரிக்கிறோம்.பைன் உட் போட்டால் தான், இசை இனிமையா இருக்கும்; வெயிட்டும் குறைவா இருக்கும். காற்று எடுக்கிற, 'பெல்லோஸ்' தயாரிக்க ஆட்டுத்தோல் பயன்படுத்துகிறோம். அதுதான் மெல்லிதாக இருக்கும்; எத்தனை வருஷம் ஆனாலும், மடிப்பு மாறாம அசைஞ்சுட்டே இருக்கும்.சிங்கிள் மற்றும் டபுள் ஆர்மோனியம் தயாரிக்க ஐந்து நாட்கள் ஆகும். 'டிரிபிள், போர் செட்' ஆர்மோனியம் செய்ய, ஒரு மாதத்தில் இருந்து ஒன்றரை மாசம் வரைக்கும் ஆகும். சிங்கிள் செட் ஆர்மோனியம் 8,500 ரூபாய், டபுள் செட் 16,000, டிரிபிள் செட் 70,000, போர் செட் 1 லட்சம் ரூபாய்க்கு மேல வரும். 'கீ போர்டு'க்கும், ஆர்மோனியத்துக்கும் இசையில நிறையவே வித்தியாசம் இருக்குது. ஆர்மோனியத்துல இசை துல்லியமாக இருக்கும்.கீ போர்டுல ஒரு பட்டன, 'டச்' பண்ணினா ஒரே ஒரு இசை தான் வரும்; ஆனா, ஆர்மோனியத்துல ஒரு பட்டன்லயே நாம அழுத்துற விசையை பொறுத்து கால் நோட்டு, அரை நோட்டு, முக்கால் நோட்டுன்னு பலவித இசை வரும். அதனால தான், இசை அமைக்கிறதுக்கு இன்னைக்கும் ஆர்மோனியம் பயன்படுத்துறாங்க.மகத்துவமான இந்த தொழிலை செய்ய கூடுதல் ஆட்கள் இல்லை; அதனால், என் மகனையும் இதில் கொண்டு வந்திருக்கிறேன். எனக்கு நான்கு மகன்கள்; முத்துராஜாவுக்கு மட்டும் தான் நுணுக்கம் வாய்த்திருக்கிறது; மற்றவர்கள் வேறு வேலை செய்கின்றனர்.முத்துராஜா: பி.எஸ்சி., முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் மார்க்கெட்டிங் வேலை பார்த்துட்டிருந்தேன். சிறு வயது முதலே அப்பா கூடவே இருந்து உதவி செய்வதால், எனக்கு இந்த வேலை நல்லாவே தெரியும். அப்பா கூட ஆர்மோனியம் செய்ற வேலையில, கடந்த 15 ஆண்டுகளாக முழு நேரமும் ஈடுபட்டிருக்கேன். மக்கள் பழசை நோக்கி வர்றாங்க. அடுத்த கட்டமா இதை ஒரு தொழிற்சாலை போன்று மாற்றி, தரமான ஆர்மோனியங்களை உருவாக்கி, இந்தியா முழுதும் சப்ளை செய்ய முயற்சி எடுத்து வருகிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை