மேலும் செய்திகள்
திரைப்படங்களை பார்த்து குஸ்தி கற்ற இளைஞர்கள்
30-May-2025
புகைப்பட கலைஞரான, லயோலா கல்லுாரி மூன்றாமாண்டு மாணவி ஹயரு நிஷா:நான் பிளஸ் 2 படிக்கும்போதே, 'போட்டோகிராபி' மீதிருந்த ஆர்வத்தால், புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்து விட்டேன். புகைப்பட கலைஞர் பழனிகுமார் என்பவரின் ஸ்டூடியோவில் புகைப்பட கலையை கற்று வருகிறேன். கண்காட்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு அங்கிருந்து தான் கிடைக்கிறது.நான் வடசென்னை பொண்ணு. வடசென்னை குறித்து கட்டமைக்கப்பட்ட ஒரு பார்வை சமூகத்தில் இருக்கிறது. தவறாக சித்தரிக்கப்பட்ட என் வாழ்விடம் குறித்த பார்வையை சரிசெய்ய, என் புகைப்படங்களை கருவியாக்கி கொண்டேன். சில நண்பர்களும், நானும் இணைந்து, 'ரீபிரேம் நார்த் சென்னை' என்ற கண்காட்சியை நடத்தினோம்.அதில், நான் எடுத்த புகைப்படங்களை காட்சிப்படுத்தினேன். அது உண்டாக்கிய தாக்கத்தை பார்த்தபோது தான், போட்டோகிராபியின் வலிமை இன்னும் முழுமையாக புரிந்தது.என் படங்கள் ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்கள் குறித்து தான் இருக்கும். பூர்வகுடிகளை நகரில் இருந்து அப்புறப்படுத்துவது, தொழிற்சாலைகளால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது, பெண்கள் முன்னேற்றம் என, பல புகைப்படங்கள் எடுத்துள்ளேன்.நான் எடுத்த பெண்கள் சார்ந்த புகைப்படங்கள் வாயிலாகத்தான், பிரிட்டனில் நடந்த, 'ஒடுக்கப்படும் பெண்கள்; சில தனிப்பட்ட கதைகள்' என்ற தலைப்பில் புகைப்படங்களை காட்சிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது.இளம் வயதிலேயே கணவரை இழந்த என் அம்மா, இந்த சமூகத்தில் எப்படி வாழ்ந்து வருகிறார் என்பது குறித்தும், அவரை போல வடசென்னையில் உள்ள இன்னும் சில பெண்களின் படங்களையும் பிரிட்டனில் காட்சிப்படுத்தினேன்.கடந்த இரு ஆண்டுகளாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு இக்கலையை கற்று கொடுக்கிறேன். ஒரு புகைப்படத்திற்கு, 'ஆங்கிள், லைட்டிங்' எல்லாம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் அந்த புகைப்படம் சொல்ல வரும் விஷயம். அதில் ஒரு, 'ஸ்டோரி டெல்லிங்' இருக்கணும். சிலர், 'சமூக பிரச்னைகள் குறித்து புகைப்படம் எடுப்பதால் மட்டும் அதை தீர்த்துவிட முடியுமா... இங்கு என்ன மாறிவிடப் போகிறது' என, கேட்கலாம்.பெரிய மாற்றம் இல்லை என்றாலும், சமூக அக்கறை சார்ந்து நான் எடுத்த புகைப்படத்தை பார்த்து, அது குறித்த ஓர் உரையாடல் துவங்கணும் என நினைக்கிறேன். அந்த உரையாடல், நாம் எதிர்பார்க்கும் பெரிய மாற்றத்துக்கு துவக்கமாக இருக்கும் என்றும் நம்புகிறேன்.
30-May-2025