உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / பனை தொழிலில் ஆண்டு முழுதும் வேலை இருக்கும்!

பனை தொழிலில் ஆண்டு முழுதும் வேலை இருக்கும்!

பனை சார்ந்த பொருட்களை, சமூக வலைதளங்களில் விற்பனை செய்து வரும், சென்னை அருகேயுள்ள குன்றத்துாரைச் சேர்ந்த லாவண்யா: சொந்த ஊர் விழுப்புரம். நாங்க பனையேறி குடும்பம். இப்போது இருக்குற மாதிரி மதிப்பு கூட்டல் செய்து, பொருளை விற்கிற வழிமுறைகள் எங்க அப்பாவுக்கு தெரியவில்லை.சென்னையில், ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வந்தேன். அடிக்கடி முதுகுவலி வந்தது. இரண்டு கிட்னியும் செயல் இழந்து விட்டன.மருந்து, மாத்திரை என, வீட்டிற்குள்ளேயே முடங்கினேன். சில மாதங்களில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தேன்.வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை. வாழ்க்கையே வெறுமையாக தெரிந்தது. அப்போது தான் நண்பராக விஷ்வா அறிமுகமானார். பனை சார்ந்து இயங்க வேண்டும் என்பது அவருடைய கனவு. பதநீரை நேரடியாக விவசாயிகளிடம் வாங்கி, கேட்டவங்களுக்கு கொடுத்து வந்தார். அப்போது விஷ்வா, 'கலப்படம் இல்லாத பதநீர், கருப்பட்டி, நுங்கு இதையெல்லாம், 'ஆன்லைன்' வாயிலாக விற்கலாம். உங்கள் ஆதரவு கிடைத்தால் நன்றாக இருக்கும்' எனக் கூறினார்.பனையேறி குடும்பத்தில் பிறந்து, பனை அழிவதை வேடிக்கை பார்ப்பதைவிட, அதைக் காப்பாற்ற ஏதாவது முயற்சி எடுக்கலாம் என்று தோன்றியது. அதனால், விஷ்வாவுடன் பங்குதாரராக இணைந்தேன்.ஆரம்பத்தில், பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து பிசினசை ஆரம்பித்தோம்; ஓராண்டு காலம் லாபம் இல்லாமல் தான் கழிந்தது; அதன்பின் ஆர்டர்கள் அதிகமாகின. 'வெப்சைட்' துவங்கினோம்.கருப்பட்டி பாகு, கற்கண்டு, பனை சர்க்கரை, பனை ஓலை பொருட்கள் என, விற்க ஆரம்பித்தோம்.சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பனம் பழஞ்சாறை அறிமுகம் செய்து ஒரே நாளில் 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தேன். நானும், விஷ்வாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இப்போது, பிசினசை என் முழு பொறுப்பில் எடுத்து நடத்துகிறேன். பதநீரை ஆன்லைனில் விற்பனை செய்த முதல், 'ஸ்டார்ட் அப்' நிறுவனம் எங்களுடையது. டிசம்பர் துவங்கி ஜனவரி வரை பனங்கிழங்கு கிடைக்கும். பிப்ரவரி துவங்கி மே வரை பதநீர் வியாபாரம் இருக்கும். ஏப்ரல் முதல் ஜூன் வரை நுங்கு விற்பனை.ஜூலை முதல் அக்டோபர் வரை பனம்பழம் கிடைக்கும். நவம்பர் மாதம் பொருட்களை மதிப்பு கூட்டல் செய்வது, 'பேக்கிங்' செய்வது என, வேலைகள் தொடர்ந்து இருக்கும். வாரத்திற்கு, 400 லிட்டர் பதநீர் விற்பனை செய்கிறேன். மாதம் 3 லட்சம் ரூபாய் வரை, 'டர்ன் ஓவர்' செய்கிறேன். தொடர்பு: 79042 34279.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ