எப்போது காட்டுக்கு போகப்போறீங்க என கேட்கின்றனர்!
ஐ.டி., வேலையை உதறிவிட்டு, 'கன்னியாகுமரி இயற்கை அறக்கட்டளை' என்ற அமைப்பை நடத்தி வரும், நாகர்கோவிலை சேர்ந்த வினோத் - பால்மதி தம்பதி:பால்மதி: பெற்றோர் பார்த்து நடத்திய திருமணம் தான் எங்களுடையது. இயற்கை குறித்து கணவரின் ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்தது. முதன்முதலாக, பரம்பிக்குளம் புலிகள் சரணாலயத்திற்கு சென்றோம்.அதன்பின், தொடர்ந்து வார இறுதி நாட்களில் அங்கு நேரத்தை செலவிட்டு, மீண்டும் திங்கள்கிழமை அலுவலகம் ஓடி வருவோம். 'நன்கு சம்பாதித்துவிட்டு, 45 வயதிற்குள் ஓய்வு பெற வேண்டும். அதன்பின், இயற்கை செயற்பாட்டாளர்களாக மாறிவிட வேண்டும்' என்று, இருவரும் சேர்ந்து முடிவெடுத்தோம். இருவரும் சம்பாதித்ததால், கொஞ்சம் சீக்கிரமாகவே வேலையை விட்டு விட்டோம்.தமிழகத்தையும் தாண்டி, பல வனப் பாதுகாப்பு இயக்கங்களுடன் இணைந்து, தன்னார்வலர்களாக காட்டுக்குள் சென்று வந்தோம். இந்தியா முழுதும் இருக்கும் வனங்களுக்கு பயணம் செய்திருக்கிறோம்.வினோத்: பல்லுயிரியலை பற்றி நிறைய ஆய்வு செய்தோம். வனத்துறை எங்கள் ஆர்வத்துக்கு மதிப்பளித்தது. வனத்துறையுடன் சேர்ந்து, பல விழிப்புணர்வு முகாம்கள், கணக்கெடுப்புகள், அரியவகை உயிரின மீட்டுருவாக்கம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என, செயல்பட்டோம். எங்கள் ஆர்வத்தைப் பார்த்து, வனத்துறைக்கு பயிற்சியளிக்க வாய்ப்பும் கொடுத்தனர்.கடந்த 2022ல், 'கன்னியாகுமரி இயற்கை அறக்கட்டளை' என்ற அமைப்பை துவக்கினோம். இதில், 80 தன்னார்வலர்கள் கொண்ட ஒரு பெரிய குழு உள்ளது. 400 சதுர கி.மீ., பாதுகாக்கப்பட்ட கன்னியாகுமரி இயற்கை சரணாலயத்தை மீட்க முடிவெடுத்தோம்.கன்னியாகுமரி சரணாலயத்தின் பெரும்பகுதியை, ஒருவகை அன்னிய தாவர இனம் ஆக்கிரமித்து இருந்தது.வெளியே இருந்து பார்த்தால் பசுமை போர்த்திய பிரதேசமாய் தெரிந்தாலும், மற்ற மரங்களின் வளர்ச்சியை பாதித்து கேடு விளைவிக்கக் கூடியது அந்த தாவரம். நாங்கள் அதை அகற்றி, காட்டை மீட்டெடுத்தோம். ஒளிரும் காளான்களை முதன் முதலாக அடையாளம் கண்டவர்களும் நாங்கள்தான்; அதையும் ஆவணமாக்கிஉள்ளோம்.எங்கள், 'ரோமிங் ஓவல்ஸ்' என்ற வலைப்பதிவில், 'இயற்கையையும், உயிரினங்களையும் பாதுகாப்பது எப்படி?' என்பதை எளிய நடையில் எழுதுகிறோம்.சூழலியலில் கவனம் செலுத்தும் பலர், எங்களுடன் பயணம் செய்ய ஆர்வத்துடன் இருக்கின்றனர். 'இதெல்லாம் தேவையா?' என்று, எங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆரம்பத்தில் கேட்டனர். ஆனால் இப்போது, 'அடுத்து எப்போது காட்டுக்கு போகப் போறீங்க?' என்று, கேட்க ஆரம்பித்து விட்டனர்.