உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / மதிப்பு கூட்டிய பால் விற்பனையில் ஆண்டுக்கு ரூ.2 கோடி வர்த்தகம்!

மதிப்பு கூட்டிய பால் விற்பனையில் ஆண்டுக்கு ரூ.2 கோடி வர்த்தகம்!

பால் பண்ணை நடத்தி பாலை மதிப்பு கூட்டி தயிர், பனீர் தயாரித்து விற்பனை செய்து வரும், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதாகும் தினேஷ்: என் குழந்தைக்கு தரும் பால் எந்த அளவுக்கு தரமாகவும், சுத்தமாகவும், கலப்படம் இல்லாமலும் இருக்கணும்னு நினைக்கிறேனோ... அதே தரத்துடன் மற்றவர்களுக்கும் தரணும் என ஆசைப்பட்டு ஆரம்பிச்சது தான், இந்த பால் பண்ணை. அதனாலேயே இதுக்கு, 'பால் டப்பா கம்பெனி' என பெயர் வெச்சிருக்கேன். நான் பொறியியல் பட்டதாரி; பரம்பரை விவசாய குடும்பத்தில் பிறந்தவன். அப்பா, 7 ஏக்கர் நிலத்தில் தென்னை சாகுபடி செய்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தால் நாட்டு மாடுகளின் மகத்துவம் குறித்த விழிப்புணர்வும், அதில் உள்ள சத்துகள், மருத்துவ குணங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பரவியது. இதற்கு அதிக சந்தை வாய்ப்புகள் இருப்பதால், இதையே தொழிலாக செய்யலாம் என்று முடிவெடுத்தேன். குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட, 'காங்கிரேஜ்' இன மாடுகள் நம்ம ஊர் தட்பவெப்ப நிலைக்கு சரியாக இருக்கும் என்றும், ஒரு காங்கிரேஜ் மாடு தினமும் சராசரியாக, 10 லிட்டர் பால் தரும் என்றும் தெரியவந்தது; 2017-ல் காங்கிரேஜ் மாடு ஒன்றை வாங்கினேன். அடுத்தடுத்து, 'சாஹிவால், சிந்தி' இன மாடுகளை வாங்கி பால் பண்ணையை ஆரம்பிச்சோம். இப்ப, பண்ணையில் மொத்தம், 200 காங்கிரேஜ் மாடுகள் இருக்கின்றன. பசுந்தீவனம், உலர்தீவனம், அடர்தீவனம் ஆகிய மூன்று வகையான தீவனங்களையும் சரியான விகிதத்தில் கொடுக்கிறோம்; இயற்கையான தீவனங்களையே கொடுக்கிறோம். கொட்டகையை தினமும் சுகாதாரமாக பராமரிக்கிறோம். மாலை 5:00 மணிக்கு பாலை கறந்து, '4 டிகிரி செல்ஷியஸ்' வெப்ப நிலையில் குளிரூட்டி, மறுநாள் அதிகாலை 2:00 மணியிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்கிறோம். கடந்த 2018-ம் வருஷம் தினமும், 25 லிட்டர் பால் விற்பனை செய்தோம். இப்ப, வாடிக்கையாளர்களின் ஆதரவால் சராசரியாக, 500 லிட்டர் பால் விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கோம். பால் விற்பனை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை மூலம் ஆண்டுக்கு, 2 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெறுகிறது. எங்கள் உழைப்புக்கேற்ற கணிசமான லாபம் கிடைக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் லாபம் அதிகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !