உயிரை காப்பாற்றிய சிட்டு குருவிகளுக்கு சரணாலயமான வீடு! மக்களின் உடல்நலனுக்கு நன்மை செய்யக்கூடிய தொழில் செய்கிறேன்!
தன் வீட்டையே சிட்டுக் குருவிகளுக்கான சரணாலயமாக மாற்றியுள்ள, கோவை மாவட்டம், காந்தையூர் கிராமத்தைச் சேர்ந்த, 50 வயதாகும் குருசாமி:சில ஆண்டுகளுக்கு முன், வீட்டில் கோழிகள் வளர்த்து வந்தேன். அவற்றுக்கு போடும் தீவனத்தை சாப்பிட சிட்டுக்குருவிகள் வந்து செல்வது வழக்கம்; அவற்றை விரட்ட மாட்டேன். அதனால், நிறைய சிட்டுக்குருவிகள் வர ஆரம்பித்தன.அவற்றுக்கும் சேர்த்து தீவனங்கள் வைக்க ஆரம்பித்தேன். இதனால், சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில், காட்டு யானை ஒன்று எங்கள் ஊருக்குள் புகுந்து விட்டது. நான் வீட்டு முன்னால் கட்டில் போட்டு துாங்கிக் கொண்டிருந்தேன்.தெருவில் சென்ற யானையை பார்த்து எங்கள் வீட்டு நாய் குரைக்கவும், கோபமான யானை அதை துரத்தியபடியே வந்தது. பயத்தில் நாய் சத்தமில்லாமல் என் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டது.வீட்டுக்கு முன் இருந்த பெரிய மரத்தை தாண்டி, யானையால் வர முடியவில்லை. கோபத்தில் மரத்தை முறிக்க பார்க்கவும், மரத்தில் இருந்த சிட்டுக்குருவிகள் எல்லாம், 'கீச் கீச்' என கத்தியபடியே பறக்க ஆரம்பித்தன. அந்த சத்தம் கேட்டு, யானை அப்படியே நின்றது. சிட்டுக் குருவிகளின் சத்தம் கேட்டு நானும் விழித்துக் கொண்டேன்.வீட்டு வாசலில் யானையை பார்த்ததும் எனக்கு பயத்தில் கை, கால்கள் ஓடவில்லை. யானை, மரத்தை முறித்து உள்ளே வர முயற்சித்துக் கொண்டிருந்தது. அப்போது, சிட்டுக்குருவிகள் சத்தம் போட்டபடியே பறக்க, யானை உள்ளே வராமல் தயங்கி நின்றது. நான் வீட்டுக்குள் ஓடிவிட்டேன். யானை ஒருமுறை பிளிறிவிட்டு திரும்பி சென்று விட்டது; அன்று என்னை காப்பாற்றியது, சிட்டுக்குருவிகள் தான்.அந்த சம்பவத்திற்கு பின், எனக்கு சிட்டுக்குருவிகள் மீது பாசம் அதிகமானது; வீடு முழுக்க, 50க்கும் மேற்பட்ட கூடுகள் வைத்துள்ளேன். என் வீட்டை குருவிகளின் சரணாலயமாக மாற்றிய பின், ஒருமுறை கூட காட்டு யானையின் அச்சுறுத்தல் ஏற்படவில்லை.குருவிகள் பெரும்பாலும் மனிதர்களை சார்ந்து வாழும் பறவைகள். வீடுகளில் உள்ள துவாரங்கள் மற்றும் இடுக்கான பகுதிகளில் தான் கூடு கட்டும். நாம் வீடு கட்டும் முறையை மாற்றியதால், குருவிகளின் வாழ்விடங்கள் குறைந்து கொண்டே வருகின்றன.சிட்டுக்குருவிகள் அழிந்தால், உலகின் உணவு சங்கிலியில் மாற்றம் ஏற்பட்டு, மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படும். குருவிகள் வீட்டுக்கு வந்தால், தானியங்கள் போடுவதுடன், சிறு பாத்திரத்தில் தண்ணீரும் வைக்க வேண்டும். அட்டை பெட்டிகளில் கூடுகள் செய்து வைத்தால், சிட்டுக்குருவிகளும் நம்முடன் வசிக்கும்.தொடர்புக்கு: 99766 13699.'மக்களின் உடல்நலனுக்கு நன்மை செய்யக்கூடிய தொழில் செய்கிறேன்!'