மேலும் செய்திகள்
பனை பாரம்பரியம் மட்டுமல்ல நம் அடையாளம்!
18-Feb-2026
டாக்சிக் - டீசர் | Toxic Official Tamil Teaser
20-Feb-2026
அரிசி திப்பிலி இலையில் துவையல் செய்து, இரு உணவகங்களுக்கு விற்பனை செய்து வரும், கடலுார் மாவட்டம், சிதம்பரம் தாலுகா, ஒரத்துாரில் வசிக்கும், அருள்செல்வி: எங்கள் வீட்டு தோட்டத்தில், அரிசி திப்பிலி செடி தானாகவே வளர்ந்தது. அது குறித்து எனக்கும் அவ்வளவாக தெரியாது. ஒருமுறை வீட்டுக்கு வந்திருந்த வைத்தியர் ஒருவர், 'இது அரிசி திப்பிலி இலை. துவையல் செய்து சாப்பிட்டால், குடல் வாயுவை போக்கும். சளி, கபம், கோழையை நீக்கும், நுரையீரலுக்கு பலம் தரும். உடலை வலிமை அடைய செய்யும். குழந்தைகளை சாப்பிட பழக்குங்கள்' என்று கூறிவிட்டு சென்றார். அதன்பின் துவையல் செய்து சாப்பிட்டோம்; நன்றாக இருந்தது. பலரும் கேட்க துவங்கியதால், அது வியாபாரமாகவும் மாறிவிட்டது. திப்பிலி இலை, சுக்கு, மிளகு, கொத்தமல்லி மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை நல்லெண்ணெய் விட்டு வறுத்து ஆற வைக்கவும். அவற்றுடன் புளி, மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பரிமாறவும். சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்; டிபன் வகைகளுக்கும் ருசியாக இருக்கும். திப்பிலி இலை துவையலின் மருத்துவ பயன்கள் குறித்து, சித்த மருத்துவர் சங்கீதா: வாதம், பித்தம், கபம் ஆகிய உயிர் தாதுக்களில் சமநிலையின்மையே உடலில் நோய்கள் உண்டாவதற்கு அடிப்படை காரணம். இம்மூன்றையும் சமநிலையில் வைத்திருக்கும் திரிகடுகு சமப்பொருட்களில் சுக்கு, மிளகு, அரிசி திப்பிலி ஆகிய மூன்றும் உள்ளன. மருத்துவ குணமிக்க இவற்றையே துவையலுக்கு பயன்படுத்துகின்றனர். சமீபகாலமாக கல்லீரல் நோய்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றுக்கு திப்பிலி துவையல் நல்ல மருந்தாக இருக்கும். மேலும், பூஞ்சை எதிர்ப்பு செயல்பாடும், திப்பிலிக்கு அதிகம். திப்பிலியை உட்கொண்டால், தேமல் நீங்கும். விந்து பெருகும். இருமல் மற்றும் இரைப்பு போன்றவை குணமாகும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. சுக்கு, மிளகு, திப்பிலி என மூன்றையும் சேர்த்து செய்யப்படும் திரிகடுகம் என்பது மிகச்சிறந்த கூட்டு மருந்து என்று சித்த மருத்துவத்தில் போற்றப்படுகிறது. அத்தகைய மூன்றும் இந்த துவையலில் இணைந்துள்ளன. துவையலில் கொத்தமல்லி சேர்க்கப்படுவதால், திரிகடுகின் காரத்தன்மையை சமப்படுத்தும். பெருங்காயம் செரிமானத்துக்கு உதவும்; நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்வதால், திரிகடுகின் வெப்ப வீரியம் சாந்தப்படும். துவையலை நீண்ட நேரம் வைத்திருக்க கூடாது. துவையலை அரைத்த உடனே சாப்பிட்டு விட வேண்டும். வயிற்று எரிச்சல், குடல் புண் உள்ளவர்கள் இந்த துவையலை தவிர்க்கலாம். தேனீக்கள் வளர்ப்பில் இனிப்பான லாபம்! தேனீக்கள் வளர்ப்பில் ஆண்டுக்கு, 8 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டும், தஞ்சாவூர், பர்மா காலனியைச் சேர்ந்த, 34 வயதான பிரபாகரன்: அப்பா, என் சிறு வயதிலேயே இறந்து விட்டார். அம்மா தான் குடும்ப பொறுப்புகளை கவனித்துக் கொண்டார். நான், பட்டப்படிப்பு முடித்ததும், அரிசி கடை நடத்தி வந்தேன். நான்கு ஆண்டுகளுக்கு முன் சமூக வலைதளங்களில், தேனீ வளர்ப்பு குறித்த காணொலிகளை எதேச்சையாக பார்த்தேன். பின், கோவை வேளாண்மை பல்கலையில் நடந்த தேனீ வளர்ப்பு பயிற்சி யில் பங்கேற்றேன். சொக்கலை என்ற கிராமத்தில் வசிக்கும் என் உறவினர், 27 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்கிறார் என்ற விபரம் தெரியவந்ததும், அவரிடம் தேனீ பெட்டிகள் வைக்க அனுமதி கேட்டேன். அவரும் முழு மனதுடன் சம்மதித்தார். ஆரம்பத்தில், 15 பெட்டிகள் வைத்தேன். தேன் அதிகமாக கிடைக்க ஆரம்பித்ததும், பெட்டிகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்தேன். தற்போது, இயற்கை விவசாயம் செய்யும் வெவ்வேறு இடங்களிலும் சேர்த்து, மொத்தம் 250 பெட்டிகளில் தேன் சேகரித்து வருகிறேன். 'அக்மார்க்' போன்ற தரச்சான்றுகள் வாங்கி, 'ஆதி தேன்' என்ற பெயரில் விற்பனை செய்கிறேன். ஜனவரி முதல் மே மாதம் வரை ஒரு பெட்டிக்கு சராசரியாக, 6.5 கிலோ வீதம் மொத்தம், 250 பெட்டிகளில் இருந்து, 1,625 கிலோ தேன் கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதன் மேல் இன்னொரு பாத்திரத்தில் தேனை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, விற்பனை செய்கிறேன். இதனால், பூஞ்சை உள்ளிட்ட பாதிப்பு இல்லாமல், நீண்ட நாட்கள் தேன் புதிதாகவே இருக்கும். மொத்த விற்பனையில் ஒரு கிலோ தேன் 500 ரூபாய் என்றும், சில்லரை விற்பனையில் 700 ரூபாய் என்றும் விற்பனை செய்கிறேன். ஒரு கிலோவுக்கு சராசரியாக, 600 ரூபாய் வீதம் விலை கிடைக்கிறது. ஓராண்டுக்கு, 1,625 கிலோ தேன் விற்பனை செய்வதன் வாயிலாக, சராசரியாக, 9.75 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இதில் எல்லா செலவுகளும் போக, 8 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. மேலும், தேன் சோப்பு, தேனில் துளசி மற்றும் துாதுவளை கலந்து சாக்லேட்களும் தயார் செய்து விற்பனை செய்கிறேன். இந்த பணிகளை என் மனைவி கவனித்துக் கொள்கிறார். என்னிடம், 1 ஏக்கர் கூட நிலம் கிடையாது. ஆனாலும், தேனீ வளர்ப்பில் வெற்றிகரமாக லாபம் பார்த்து வருகிறேன். தொடர்புக்கு 97919 91863
18-Feb-2026
20-Feb-2026