உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / விவசாயிகளுடன் சேர்ந்து நாங்களும் வளர்வோம்!

விவசாயிகளுடன் சேர்ந்து நாங்களும் வளர்வோம்!

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக விளைபொருட்களை வாங்கி, நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும், 'வேளாண் மார்ட்' நிறுவனர்களில் ஒருவரான ரமேஷ்:நான், ஆரோன், புண்ணியமூர்த்தி என, நாங்கள் மூவருமே புதுக்கோட்டை வேளாண் கல்லுாரியில் இளங்கலை வேளாண்மை படித்தோம்.மூன்றாமாண்டு படிக்கும்போது, விடுதியில் உணவுக் கட்டணத்தை திடீரென உயர்த்தினர். 'ஏன் இவ்வளவு அதிகமாக இருக்கிறது?' என்று யோசித்து, அதற்கான காரணத்தை தேட ஆரம்பித்தோம்.அப்போது தான் காய்கறி, அரிசி மாதிரியான பொருட்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வராமல், கமிஷன் ஏஜன்ட்கள் வாயிலாக பல கட்டங்களை கடந்து வருவதால், விலை அதிகமாகிறது என்று புரிந்தது.கல்லுாரி படிப்பின் நான்காமாண்டில், 'புராஜெக்ட்' இருக்கும். ஆறு மாதங்கள் தமிழகம் முழுக்க உள்ள பல்வேறு காய்கறி, பழ சந்தைகளுக்கு சென்று பார்த்தோம்.விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கி, நிறுவனங்களுக்கு கொடுக்கிற முறையை முயற்சி செய்து பார்க்கலாம் என்று முடிவெடுத்து, எங்கள் கல்லுாரியில் யோசனையை சொல்லி வாய்ப்பு கேட்டோம்; கிடைத்தது. நானும், ஆரோனும் தலா 5,000 ரூபாய் முதலீடு செய்து தொழில் ஆரம்பித்தோம்.ஆரம்பத்தில் எங்கள் கல்லுாரியில் மட்டும் இதை செய்து கொண்டிருந்த எங்களுக்கு, அடுத்தடுத்த கல்லுாரிகளில் இருந்தும், 'ஆர்டர்'கள் வர ஆரம்பித்தன.ஆர்டர்கள் அதிகமாக வர ஆரம்பித்ததும், தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்காக, 'வேளாண் மார்ட்' என்ற செயலியை உருவாக்கினோம்.இந்த செயலியில், தினமும் மாலை 6:00 மணிக்குள் கல்லுாரி நிர்வாகம், அடுத்த நாளைக்கு தேவையான பொருட்களுக்கான ஆர்டரை பதிவிட வேண்டும்.நாங்கள், தேவையான பொருட்களை தயார் செய்து, மறுநாள் அதிகாலையே வினியோகம் செய்து விடுவோம்.இப்படி, 'டிஜிட்டல்' முறைக்கு மாறிய பின், எவ்வளவு ஆர்டர்கள் வருகின்றன; எவ்வளவு விற்பனை ஆகிறது; எந்த பொருளுக்கு எவ்வளவு தேவை இருக்கிறது என, எங்களால் எளிதாக கணக்கு பார்க்க முடிகிறது. தற்போது எங்கள் நிறுவனம் நான்கு மாவட்டங்களில் இயங்குகிறது. சென்னை, மதுரை, கோவை போன்ற மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யும் திட்டம் இருக்கிறது. நிறுவனம் ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன.இப்போது 1,000 விவசாயிகளுடன் இணைந்து, ஆண்டுக்கு 3.2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது; 25 பணியாளர்கள் இருக்கின்றனர்; கூடிய விரைவில் பணியாளர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். விவசாயிகளுடன் சேர்ந்து நாங்களும் வளர்வோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !