உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / பாரம்பரியம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்!

பாரம்பரியம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்!

பாரம்பரிய பொருட்களை மீட்டு, அவற்றை வீட்டு அலங்கார பொருட்களாக மாற்றி, 'அகவை' என்ற நிறுவனம் வாயிலாக விற்பனை செய்து வரும், திருப்பூரைச் சேர்ந்த பள்ளி தோழியரான, 36 வயதாகும் பூங்குயிலி - பவித்ரா: * பூங்குயிலி: பவித்ரா, ஐஸ்வர்யா, நித்யா என, நாங்கள் நால்வரும் கல்லுாரி வரை ஒன்றாக படித்த நெருங்கிய தோழியர். படிப்பு முடித்ததும் எங்களுக்கு தகவல் தொழில்நுட்ப துறையில், வெவ்வேறு இடங்களில் வேலைகள் கிடைத்தன. ஆனாலும், ஏதாவது தொழில் துவங்க வேண்டும் என்பதே எங்களது பல ஆண்டு ஆசை. ஒவ்வொரு முறை நாங்கள் சந்தித்துக் கொள்ளும்போதும், தொழில் குறித்து தான் பேசிக் கொள்வோம்; அது ஒருநாள் செயலாக மாறியது. பலரின் வீட்டு பரண்களில், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் பித்தளை பாத்திரங்கள், துாக்குவாளிகள், மரப்பாச்சி பொம்மைகள் போன்ற பாரம்பரிய பொருட்களை மீட்டு, அவற்றை விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்தோம். நாங்கள் நால்வரும் தலா, 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, தமிழகம் முழுதும் பயணித்து, தனித்துவமான பொருட்களை வாங்கினோம். எங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் சிறு இடம் ஒதுக்கி, நிறுவனமாக ஆரம்பித்தோம். இப்போது, 150க்கும் மேற்பட்ட ரகங்களில், பாரம்பரிய பொருட்கள் எங்களிடம் உள்ளன. சமூக வலைதளங்களில் நாங்கள் பதிவிடும் பொருட்கள், பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே விற்பனை ஆகிவிடும். எங்களுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களிலும், 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். * பவித்ரா: பழைய பொருட்களை நாங்களும் தேடிச் சென்று வாங்குகிறோம்; எங்களை தொடர்பு கொண்டு கொடுப்போரும் இருக்கின்றனர். பொருளின் தரம், உறுதியை முதலில் பரிசோதித்து, சுத்தம் செய்து, மராமத்து வேலைகள் பார்த்து, அதன் பழமை மாறாமல் விற்பனை செய்கிறோம். நாங்கள் வாங்கும் பழங்காலத்து பொருட்கள் பெரும்பாலும் ஒன்றே ஒன்று தான் இருக்கும். 'எங்களிடம் இந்த பொருள் இருக்கிறது' என, சமூக வலைதளங்களில் ஒன்றான, 'இன்ஸ்டாகிராமில்' பதிவிடுவோம். முதலில் யார் பணம் கட்டுகிறாரோ, அவருக்கு அந்த பொருளை விற்பனை செய்து விடுவோம். இப்போது, மாதம் 2 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடக்கிறது. கடை துவங்கும் ஆசையும் இருக்கிறது. பாரம்பரியம் என்பது, அருங்காட்சியகங்களில் மட்டும் பாதுகாக்கப்பட வேண்டிய விஷயமில்லை; அது, தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் தொடர வேண்டும். அதை நோக்கிய எங்களது முயற்சிகள் தொடரும். தொடர்புக்கு பூங்குயிலி: 90364 58222.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்