காவல் துறை அதிகாரியாக பணியாற்ற விருப்பம்!
தற்காப்பு கலைகளான கராத்தே, சிலம்பத்தை முறையாக பயின்று, பல்வேறு சாதனைகள் படைத்து வரும், சேலம் காடையாம்பட்டியைச் சேர்ந்த 4ம் வகுப்பு மாணவர் கவியரசு: பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியது என் குடும்பம். அப்பா லாரி ஓட்டுநர்; அம்மா இல்லத்தரசி. 4 வயது முதல் சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளை கற்று வருகிறேன். சிலம்பொலி ரத்தினகுமார் என்பவர் குழுவில், விஜயன் மாஸ்டர் மேற்பார்வையில் சிலம்பம் பயிற்சி; சென்னையில் உள்ள, 'மாற்றம் அகாடமி' குழுவின் நிறுவனர் மோகனிடம், இலவச கராத்தே பயிற்சி பெற்று வருகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக, 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று, பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளேன்.கோவாவில் நடைபெற்ற போட்டியில், என் 6 வயதில் சிலம்பத்தில் இரண்டாவது இடம் பெற்றேன். கராத்தே போட்டியில் 2022ல், தேசிய அளவில் சாம்பியன் பட்டம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளேன்.கடந்த 2024ல், புனேவில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கமும், தேசிய சாம்பியன்ஷிப் பட்டமும் வென்றுள்ளேன். தனிநபர் பிரிவில், சிலம்பத்தில் நான்கு உலக சாதனைகள் செய்துள்ளேன்; மேலும், ஏராளமான விருதுகளை பெற்றுள்ளேன்.கராத்தே, சிலம்பப் போட்டிகளில் பங்கேற்பதுடன், இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பல விருதுகளை பெற்றுள்ளேன். இயற்கையை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தமிழகம் முழுக்க பயணம் செய்வது, மரங்கள் நட்டு வளர்ப்பது மற்றும் மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு திட்டங்கள், என்னிடம் உள்ளன.வருங்காலத்தில் காவல் துறை அதிகாரியாக பணியாற்ற விரும்புகிறேன். தொடர்புக்கு: 94438 93272