மேலும் செய்திகள்
'குற்றமில்லாத சமுதாயம்' உருவாக்க புதிய திட்டம்
03-Oct-2024
ஏழை குழந்தைகளுக்கு சத்து மாவு தயாரித்து வழங்கும், ஈரோடு மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சேர்ந்த தங்கவேலு:தற்போது கோவை மாவட்டம் ஆலாந்துறையில் வசிக்கிறேன். காப்பீட்டு துறையில் பணியாற்றியபடியே, சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சத்து மாவு தயாரித்து வழங்குகிறேன். நண்பர்கள் உதவியுடன் மனைவி ஜெமீலாவும், நானும் இதை செய்து கொண்டிருக்கிறோம்.நான், ஏழரை மாதத்தில் பிறந்து விட்டேன்; மிகவும் ஒல்லியாக, சத்து இல்லாமல் இருந்தேன். அதனால், பாட்டி சத்து மாவு தயாரித்து கொடுத்து தான் என்னை தேற்றினார். அதேபோல், என் மகளும் டாக்டர் கூறிய தேதிக்கு முன்னரே பிறந்து விட்டாள். எனக்கு சிறுவயதில் கொடுத்த அதே சத்து மாவை, அவளுக்கும் கொடுத்து தேற்றினோம்.உடலில் எந்த பிரச்னை என்றாலும், பாட்டியும், அம்மாவும் கைவைத்தியம் தான் செய்வர். வளர்ச்சிக் குறைபாடு, சத்துக் குறைபாடு எல்லாம் இன்று பொது பிரச்னையாகி இருக்கிறது. நம்மிடம் சத்தான உணவுகள் இருந்தும், அவற்றை பயன்படுத்துவதில்லை. கிராமப்புறங்களில், குறிப்பாக பழங்குடி சமூகங்களில் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெண்களுக்கும் சத்துக் குறைபாடு, ரத்த சோகை பிரச்னைகள் இருக்கின்றன.இவை குறித்து அம்மா, மனைவியிடம் பேசியதில், 'நம்மால் முடிந்தளவு சத்து மாவு கஞ்சி தயாரித்து இலவசமாக கொடுக்கலாம்' என்று கூறினர். முதன் முறையாக, புளியானுார் பள்ளியில் தான் கஞ்சி தயாரித்து தந்தோம்; பள்ளி மாணவர்களுக்கு அந்த சுவை மிகவும் பிடித்திருந்தது. தற்போது பள்ளிகள், சத்துணவுக் கூடங்கள், ஊர் பொது இடங்கள் என, அந்தந்த பகுதிகளில் இருக்கும் நண்பர்கள் வாயிலாக வாரத்திற்கு ஒருமுறை களியாகவோ, கஞ்சியாகவோ செய்து தருகிறோம். சத்து மாவு குறித்து கேள்விப்பட்ட நண்பர்கள் பலரும், 'எங்களுக்கும் அனுப்புங்கள்' என்று கேட்கத் துவங்கினர். எங்கள் தயாரிப்புக்கு, 'திருமூலர்' என பெயர் வைத்துள்ளோம். சத்து மாவில் கம்பு, சோயாபீன்ஸ், மொச்சைப்பயிர், பார்லி என, 32 தானியங்கள் சேர்ப்போம்; 11 தானியங்களை முளை கட்ட வைத்து, கூடவே முசுமுசுக்கை, ஆவாரை என, சில மூலிகைகள் சேர்ப்போம்.குழந்தை பருவத்திலேயே சத்தான ஆகாரங்களை தந்துவிட்டால், வளரிளம் பருவத்தில் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அதனால், நேந்திரம் பழத்தை வைத்து ஒரு இணை உணவு தயார் செய்கிறோம். வயதான அம்மா ஒருவர், கல் மிஷினில் அரைத்து தருகிறார்.பல நண்பர்கள் உதவி செய்கின்றனர். அதனால், தற்போதுள்ள நிலையில் வாரம் ஒருமுறை கொடுக்க முடிகிறது. குறைந்தது வாரத்திற்கு மூன்று முறை கொடுக்க வேண்டும் என்பது தான் இலக்கு. சிறு பங்களிப்பு தான்; ஆனாலும், மனதிற்கு பிடித்துள்ளது.தொடர்புக்கு: 99948 83999
03-Oct-2024