ஒயர் கூடைக்கு புது மவுசு ஏற்படுத்தியுள்ளோம்!
விதவிதமான ஒயர் கூடைகள், கைகளால் வரையப்பட்ட ஓவியங்கள், தனித்துவமான துணிப்பைகள், ஆபரணங்கள், 'பிரிட்ஜ் மேக்னட்'கள் என விற்பனை செய்துவரும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, 'கை' கைவினை பொருட்கள் கடை உரிமையாளர் தனிஷயா: எனக்கு சொந்த ஊர், கோவை. சிறு வயது முதலே, கலைகளில் ஆர்வம் அதிகம். பள்ளிப்படிப்பு முடித்ததும், ஆடை வடிவமைப்பில் பொறியியல் படிப்பு படித்து முடித்தேன். பின், இரண்டு ஆண்டுகள் லண்டனில் தங்கி, ஆடை வடிவமைப்பு பட்டப் படிப்பை முடித்தேன். படித்து முடித்ததும், லண்டனில் வேலையும் கிடைத்தது. திருமணம் செய்யணும் என்று கூறி, இந்தியா வர வைத்து விட்டனர். ஹாங்காங்கில் ஒயர் கூடைகள் தயார் செய்து விற்பனை செய்வதை பார்த்தேன்; லட்சங்களில் விலை கூறினர். ஆனால் நாமோ, நம் ஊர்களில் ஒயர் கூடைகளை மதிப்பதே இல்லை. அதனால் நானும், என் தோழியும், முதலில், கம்ப்யூட்டரில் டிசைன்கள் வரைந்து, அவற்றை எப்படி கூடையாக பின்னுவது என்பதைக் கற்றுக் கொண்டோம். சென்னையில் நடந்த ஒரு கண்காட்சியில் எங்களிடம் இருந்த கூடைகளை காட்சிப்படுத்தினேன். ஆச்சரியப்படத்தக்க அளவுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால், இதையே தொழிலாக ஆரம்பிக்கலாம் என்றும், கூடைகள் விற்பனையுடன், கைவினைப் பொருட்களின் விற்பனையையும் துவக்கலாம் என நினைத்தேன். சென்னையில் இருக்கும் நான்கு பெண்கள் தயார் செய்த கைவினைப் பொருட்களை வைத்து, கடையை ஆரம்பித்தேன். இப்போது நுாற்றுக்கும் அதிகமான பெண்கள் தயாரிக்கும் பொருட்கள் எங்களிடம் இருக்கின்றன. மருத்துவர்கள், ஆசிரியர்கள், தகவல் தொழில்நுட்பத்தில் வேலை செய்வோர் என, பல துறைகளை சேர்ந்தவர்களின் பொருட்களும் எங்கள் கடைகளில் கிடைக்கும். கூடையையும், மஞ்சள் பையையும் ஒரு பெரிய கடையில் வைத்து விற்பனை செய்வது, மிகவும் பெரிய விஷயம். அதை சராசரி பெண்களுக்கும் சாத்தியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த, 'கை' கடை! எங்களிடம், 30 ரூபாய் முதல் லட்சங்கள் வரை பொருட்கள் இருக்கின்றன. மாதம், 5 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடக்கிறது. எங்கள் கடையில் கலைஞர்கள் விற்பனை செய்யும் பொருட்களுக்கு, சிறு தொகையை மட்டும் கமிஷனாக நாங்கள் எடுத்துக் கொள்வோம். தொழில் ஆரம்பித்து ஒன்பது மாதமாகிறது. அடுத்து இணைய வழி கடையும், சென்னை தாண்டி மற்ற ஊர்களிலும் கடைகளை துவக்கவும், திட்டமிட்டு வருகிறோம். பொருள் உங்களுடையது; பொறுப்பு எங்களுடையது! தொடர்புக்கு: 77085 99999