உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / ‘எல்லா இடத்திலும் நம் அடையாளம் இருக்க வேண்டும்!’

‘எல்லா இடத்திலும் நம் அடையாளம் இருக்க வேண்டும்!’

திருச்சி, தில்லை நகரில், ‘வாராஹி ஸ்நாக்ஸ் அண்டு புட்ஸ்’ என்ற கடையை நடத்தி வரும் திவ்யபாரதி: நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இல்லத்தரசி. ஆனால், இதுவே என் அடையாளம் இல்லை என்று உணர்ந்தபோது, தையலகம் ஆரம்பித்தேன். அப்படியே சிறு தள்ளுவண்டி ஒன்றில் சாப்பாட்டுக் கடையும் நடத்தி வந்தேன். அது தான் இன்று பரபரப்பாக இயங்கி வரும், ‘வாராஹி ஸ்நாக்ஸ் அண்டு புட்ஸ்’ கடைக்கு பின் உள்ள வெற்றிக்கதை. நான் 10ம் வகுப்பு வரை தான் படித்துள்ளேன்; உயர் கல்வி படிக்கவில்லை என்றாலும், உழைப்பால் சாதிக்க முடியும் என்று உலகத்திற்கு புரிய வைக்க வேண்டும். யாரையும் நம்பி இருக்காமல் எனக்கென ஒரு வேலை, ஒரு அடையாளம் வேண்டும் என்று எப்போதும் நினைப்பேன். அது தான், இன்று எனக்கு நம்பிக்கையையும், மரியாதையையும் உருவாக்கி இருக்கிறது. காலையில் எழுந்த உடனே, அம்மாவாக குழந்தைக்கு தேவையானதை செய்து, பள்ளிக்கு அனுப்புவேன். அதன்பின் தையல் வேலையை ஆரம்பிப்பேன். பின், உணவு தயாரிப்பாளராக மாறி விடுவேன். கடையை மூட இரவு 9:00 மணி ஆகிவிடும். அதன்பின் மீண்டும் வீட்டுக்கு வந்தால் இல்லத்தரசி பொறுப்பு. இப்படி ஓய்வில்லாத ஓட்டப்பந்தயம் தான் என் வாழ்க்கை. ஒரு நாளில் இத்தனை வேலைகளை செய்தாலும், எதையும் சுமையாக நினைப்பதில்லை. இது, நான் விரும்பி தேர்ந்தெடுத்த பாதை. நமக்கு பிடித்த ஒரு வேலையை நாமே உருவாக்கி, அதற்காக உழைக்கிறோம். அந்த எண்ணமே பெரிய சந்தோஷத்தை கொடுக்கிறது. அதனால், எவ்வளவு வேலை இருந்தாலும், நான் அதை சுமையாக நினைக்கவில்லை; சந்தோஷமாக இருக்கிறேன். திருமணத்திற்கு பின் கணவர், குழந்தை, குடும்பம் என்று பெண்கள் வாழத் துவங்குவது இயல்பான ஒன்று தான்; அதில் தவறில்லை. ஆனால், ஒரு பெண்ணுடைய வாழ்க்கை, குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதிலேயே முடிந்துவிடக் கூடாது. இவரது மகள், இவரது மனைவி, இன்னாருடைய அம்மா என்ற அடையாளத்திலேயே பெருமைப்பட்டு நின்றுவிடக் கூடாது. ஒரு பெண்ணுக்கு தனி அடையாளம் இருக்க வேண்டும். அதற்காக குடும்பத்தை விட்டுவிட வேண்டுமா; குடும்பத்திற்காக வேலையை விடணுமா என்ற குழப்பம் எல்லாம் வேண்டியது இல்லை. வாழ்வது வேறு, சாதிப்பது வேறு! இரண்டையும் சிறப்பாகச் செய்ய முடியும். இது பெரிய வெற்றி என்று நினைத்து நின்றுவிட மாட்டேன். இன்னும் செல்ல வேண்டிய துாரம் இருக்கிறது. எல்லா இடங்களிலும் நம் அடையாளம் இருக்க வேண்டும். இதுதான் என் ஆசை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !