மேலும் செய்திகள்
மூத்த குடிமக்களின் குரல் கேட்குமா?
12-Sep-2025
'கார்மென்ட்ஸ்' தொழில் நடத்தும் நாமக்கல் மாவட்டம், மோகனுாரைச் சேர்ந்த, 47 வயது தேவசேனா: என் சொந்த ஊர், திருச்சி மாவட்டம், மணப்பாறை. விடுதி வார்டனாக இருந்த அப்பா, நாங்கள் பள்ளி படிக்கும்போதே மாரடைப்பால் இறந்து விட்டார். அப்பா வேலை, அம்மாவிற்கு கிடைத்தது. ஆனாலும், ஏழு குழந்தைகளை வளர்க்க அந்த வருமானம் பத்தவில்லை. அதனால் பள்ளி படிப்பு முடிந்ததும், எனக்கு கல்யாணம் பண்ணி வைத்து விட்டனர். மோகனுாரில் புகுந்த வீட்டிற்கு வந்த பின், கணவர் தான் என்னை டிகிரி படிக்க வைத்தார். ஏதாவது ஒரு பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும், இரண்டு பேருக்காவது வேலை கொடுக்க வேண்டும் என்று மனதிற்குள் ஓர் எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது. எனக்கு தெரிந்தது தையல் மட்டும் தான். அதை வைத்து என்ன செய்வது என்ற தயக்கமும் இருந்தது. 'நபார்டு' வங்கி மூலமாக, கிராமப்புற பெண்களுக்கு கட்டணமில்லா கைத்தொழில் பயிற்சி தருவது தெரியவந்தது. அதில் பயிற்றுநராக சேர்ந்து, கிராமப்புற பெண்களுக்கு தையல் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன். தொடர்ந்து, பல்வேறு அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்களுடன் இணைந்து, பெண்களுக்கான கட்டணமில்லா தொழில் முனைவோர் பயிற்றுநராக இருக்கிறேன். இது தவிர, தொழில் முனைவோர் ஆக நினைக்கிற பெண்களுக்கு கடன் உதவி, ஆலோசனைகள் கொடுத்து வழிகாட்டுகிறேன். இதுவரைக்கும், 50க்கும் மேலான பெண்களை தொழில் முனைவோராக மாற்றியிருக்கிறேன். 'கார்மென்ட்ஸ் பிசினஸ்' ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தபோது, கணவர் உற்சாகப்படுத்தி கூடவே நின்றார். மிகவும் சிறிய அளவில், ஐந்து பேரை வைத்து பிசினஸ் ஆரம்பித்தேன். இன்று, 22 பெண்களோடு வளர்ந்து நிற்கிறது. கார்மென்ட்ஸ் பிசினஸ் என்பது சாதாரணமானது அல்ல. வெறும் துணியாக நம்மிடம் வருவதை, நேர்த்தியான ஆடையாக மாற்றி கொடுக்கணும். பிசிறு ஏதுமின்றி, 'கட்டிங்'கும், தையலும் பக்காவாக இருக்கணும் என, நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தமிழகம் முழுக்க, பல பிரபல கம்பெனிகளுக்கு ஆர்டர் எடுத்து தைத்து கொடுத்து வருகிறோம். ஒரு பிசினசில் வேலையாட்களை தக்கவைத்து கொள்வது பெரிய சவால். குறிப்பாக, பெண்களை தக்கவைத்து கொள்வது ரொம்ப முக்கியம். அதனால், என்னிடம் வேலை செய்வோருக்கு வழக்கத்தைவிட கொஞ்சம் கூடுதல் சம்பளம் கொடுக்கிறேன். ஏற்றுமதி துணிகளுக்கு திருப்பூர், சுங்குடி சேலைகளுக்கு சின்னாளப்பட்டி, போர்வைகளுக்கு நத்தம் என்று ஒவ்வோர் ஊருக்கும் ஓர் அடையாளம் இருக்கிறது. அதே மாதிரி, மோகனுாருக்கு ஓர் அடையாளத்தை உருவாக்க ஆசை. அதற்காக உழைத்தால், நிச்சயம் நனவாக்கி விடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ***********************உலகையே மாற்றும் ஆற்றல் கல்விக்கு உண்டு!வாட்டி எடுத்த வறுமைக்கு மத்தியிலும், கடினமாக படித்து அரசு பள்ளி ஆசிரியை பணியில் இருக்கும், கரூர் காந்தி கிராமத்தில் வசித்து வரும் தீபா:கரூர் மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். அப்பா சுப்பிரமணி, தனியார் சாயப்பட்டறையில் பணிபுரிந்தார். அவருடைய சொற்ப வருமானத்தில் தான் குடும்ப செலவு, வீட்டு வாடகை, படிப்பு செலவுகள் எல்லாவற்றையும் சமாளித்தார்.கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்தபோது, என்னுடன் படித்த ரகு என்னை விரும்புவதாகவும், திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் சொன்னார். எனக்கும் அவரை பிடித்திருந்தது. ஆனால், 2 லட்சம் ரூபாய் கடனை வைத்து விட்டு, அப்பா திடீரென இறந்து விட்டார். அம்மா, டெக்ஸ்டைல்ஸ் கம்பெனிக்கு வேலைக்கு போனார். அதனால், ரகுவை மறுத்தேன்.குடும்ப கடனை அடைக்க வேண்டிய கட்டாயம். பி.எட்., படித்தால் தனியார் பள்ளியில் வேலை கிடைக்கும் என நினைத்தேன். என் பெரிய மாமா உதவியால், 2009ல் பி.எட்., முடித்து, அரவக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியை பணியில் சேர்ந்தேன்.கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்பதால் பகலில் ஆசிரியை, இரவில் அதே பள்ளியில் பெண்கள் விடுதி வார்டன் பணி என்று கடுமையாக உழைத்தேன். அப்பாவின் இறப்பு செய்தியை கேள்விப்பட்டு வந்த ரகு எனக்கு ஆதரவாக இருந்தார். 'டெட்' தேர்வில் தேர்வாகி, 2012ல் அரசு பள்ளி ஆசிரியை ஆனேன்.அதுவரை தொடர்பற்று இருந்த உறவுகள் பலரும் என்னை பெண் கேட்டு அணுகினர். ஆனால், கஷ்ட காலத்தில் என்னுடன் நின்ற ரகுவும், நானும் திருமணம் செய்து கொண்டோம். முதல் மாத சம்பளம், 24,000 ரூபாயை கையில் வாங்கியபோது, அதுவரை அனுபவித்த அத்தனை வலிகளுக்கும் ஒத்தடம் கொடுத்த மாதிரி இருந்தது.எம்.ஏ., முடித்துவிட்டு, திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் வேலை பார்த்து கொண்டிருந்த என் கணவரையும் அரசு வேலையில் சேர உற்சாகப்படுத்தினேன். அவரும் டி.ஆர்.பி., தேர்வு எழுதி, அரியலுார் மாவட்டம், பொன்பரப்பியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பி.ஜி., கிரேடு ஆங்கில ஆசிரியராக, 2014ல் பணியில் சேர்ந்தார்.என் தங்கையும், தம்பியும் அவரவர் துறைகளில் பகுதிநேர வேலை பார்த்தபடியே, பிஎச்.டி., முடித்தனர். 2016ம் ஆண்டு சொந்த வீடு கட்டினோம்; 2023ம் ஆண்டு கார் வாங்கினோம்.எங்களுடைய இரண்டு பெண் பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைக்கிறோம். 'உலகையே மாற்றும் ஆற்றல் கல்விக்கு உண்டு' என்ற என் நம்பிக்கையை, என் மாணவர்களுக்கு தினமும் சொல்கிறேன்.
12-Sep-2025