உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கோயம்புத்தூர் / கோவை ரோட்டில் விதிமீறும் வாகனங்கள்; போக்குவரத்து பாதிப்பு

கோவை ரோட்டில் விதிமீறும் வாகனங்கள்; போக்குவரத்து பாதிப்பு

விபத்து அபாயம்

கிணத்துக்கடவு - சொக்கனூர் ரோட்டில் சிங்கையன்புதூர் அருகே, ரோட்டோரம் சாய்ந்த நிலையில் தனியார் விளம்பர பலகை உள்ளது. இதனால், இரவு நேரத்தில் பைக் ஓட்டுநர்கள் செல்லும் போது, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. வாகன ஓட்டுநர்கள் நலனை கருத்தில் கொண்டு விளம்பர பலகையை அகற்ற வேண்டும். - ராஜ்குமார், கிணத்துக்கடவு.

விதிமீறும் வாகனங்கள்

பொள்ளாச்சி நல்லப்பா தியேட்டர் எதிரே, கோவை ரோட்டில் மாலை நேரத்தில் கடைகள் முன் அதிகளவு வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுவதால், ஆம்புலன்ஸ் முதல் பெரிய வாகனங்கள் வரை அவ்வழியில் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. போலீசார் தகுந்த நடவடிக்கைத்து எடுத்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். -- கோபால், பொள்ளாச்சி.

வேகத்தடை அமைக்கணும்!

பொள்ளாச்சி, மாப்பிள்ளைகவுண்டன்புதூர் மூன்று ரோடு சந்திப்பில் வேகத்தடை இல்லை. அப்பகுதியில் வாகன ஓட்டுநர்கள் வேகமாக பயணிப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்க, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். - ஜார்ஜ், பொள்ளாச்சி.

ரோட்டில் பள்ளம்

பொள்ளாச்சி, கந்தசாமி பூங்கா ரோட்டில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தடுமாறுகின்றன. சில நேரங்களில் பைக்கில் செல்பவர்கள் கீழே விழுகின்றனர். எனவே, இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும். - டேவிட், பொள்ளாச்சி.

பேனர்கள் சேதம்

உடுமலை பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகையில் உள்ள பேனர்கள் கிழிந்து தொங்குகின்றன. இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - குமார், உடுமலை.

நிழற்கூரை இல்லை

உடுமலை, கொழுமம் பிரிவு ரோட்டில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை இல்லாததால், பயணியர் அவதிப்படுகின்றனர். அப்பகுதியில் பள்ளி செல்லும் மாணவர்களும் அதிகம் பஸ்சுக்கு காத்திருக்கின்றனர். நிழற்கூரை இல்லாததால் மழை நாட்களில் பள்ளி மாணவர்கள் காத்திருப்பதற்கு இடமில்லாமல் சிரமப்படுகின்றனர். - சுகுமார், உடுமலை.

சேதமடைந்த ரோடு

உடுமலை, செல்லம் நகரில் ரோடு மிகவும் சிதிலமடைந்து குண்டும் குழியுமாகியுள்ளது. இதனால் மழை நீர் குழிகளில் தேங்குகிறது. இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் குழி இருப்பது தெரியாமல் அடிக்கடி தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். - சாந்தி, உடுமலை.

கால்வாயை துார்வாருங்க

உடுமலை - பழநி ரோட்டில் செல்லும் கழுத்தறுத்தான் பள்ளத்தில் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாயில், குப்பை, கழிவுகள் சேர்ந்துள்ளன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, கால்வாயை துார்வார நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - காமராஜ், உடுமலை.

நாய்கள் அதிகரிப்பு

உடுமலை, ஆண்டாள் சீனிவாசன் லே - அவுட் பகுதியில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. தெருநாய்கள் வீடுகளின் முன் அடிக்கடி அசுத்தம் செய்வதுடன், குப்பைக்கழிவுகள், இறைச்சி கழிவுகளை பரப்பி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. மேலும், இரவு நேரங்களில் வீதியில் பொதுமக்கள் நடந்துசெல்ல முடியாத வகையில் துரத்துவதால் அச்சத்துக்குள்ளாகின்றனர். - ராம்குமார், உடுமலை.

சுகாதார சீர்கேடு

உடுமலை, ஏரிப்பாளையம் அரசு பள்ளி அருகே குப்பைக்கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுவதால் பள்ளி வளாகத்தில் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மழை நாட்களில் கழிவுகளில் மழைநீர் தேங்கி நோய் பரவும் சூழலும் உண்டாகிறது. - ஜெய்கணேஷ், கணக்கம்பாளையம்.

ரோட்டோரத்தில் குப்பை

பொள்ளாச்சி, இந்திரா நகர் செல்லும் ரோட்டின் ஓரத்தில், அதிகளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதை பேரூராட்சி நிர்வாகம் கவனித்து உடனடியாக குப்பையை அகற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். - கண்ணன், பொள்ளாச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை