உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / புகார் பெட்டி:கால்நடை மருத்துவமனை கட்டடத்தில் அரச மர செடி

புகார் பெட்டி:கால்நடை மருத்துவமனை கட்டடத்தில் அரச மர செடி

கால்நடை மருத்துவமனை கட்டடத்தில் அரச மர செடி

காஞ்சிபுரம் ஆஸ்பிட்டல் சாலையில், அரசு கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கால்நடை வளர்ப்போர், நோய்வாய்பட்ட தங்களது ஆடு, மாடு, நாய் உள்ளிட்டவற்றை சிகிச்சை அளிக்க அழைத்து வருகின்றனர்.கால்நடை மருத்துவமனையை துறை நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு பிரிவு கட்டடத்தில், அரசமர செடிகள் வளர்ந்து வருகின்றன.இந்த செடிகள் வேரூன்றி வளர்வதால், கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கட்டடம் முழுதும் வலுவிழுந்து இடிந்து விழும் அபாயம் உள்ளது.எனவே, கால்நடை மருத்துவமனை கட்டடத்தில் வளர்ந்துள்ள அரசமரசெடிகளை வேருடன் அகற்ற, கால்நடை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- மு.குருலட்சுமி, காஞ்சிபுரம். உத்திரமேரூர் - தாம்பரம் பேருந்து இயக்க கோரிக்கை

உத்திரமேரூரில் இருந்து திருப்புலி வனம், மருதம், இடையம்புதூர், சாலவாக்கம் வழியே, தாம்பரத்திற்கு செல்ல பேருந்து வசதி இல்லை. இதனால், அப்பகுதியை சேர்ந்தோர் பள்ளி, கல்லூரி, மருத்துவமனைக்கு செல்ல, உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதன் காரணமாக, பணம் மற்றும் நேரம் விரயம் ஏற்படுகிறது. மேலும், சென்னைக்கு செல்வோரும், செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு குறித்த நேரத்திற்குள் ரயிலை பிடிக்க முடியாத நிலையும் உள்ளது. எனவே, உத்திரமேரூரில் இருந்து திருப்புலிவனம், சாலவாக்கம் வழியே தாம்பரத்திற்கு பேருந்து சேவையை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ச.அறிவழகன், திருப்புலிவனம். விழும் நிலையில் மின்கம்பம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் அடுத்த வைப்பூர் சந்திப்பில் இருந்து எறையூர், வைப்பூர் செல்லும் சிப்காட் சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலையில், 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உட்பட பாதசாரிகள் ஏராளமானோர், இந்த சாலை வழியே சென்று வருகின்றனர். இந்த சாலையோரம் மின்கம்பங்கள் வழியே, தொழிற்சாலைகளுக்கு செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் செல்கின்றன.சமீபத்தில் பெய்த மழையால், இந்த சாலையோரம் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும்விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன்,ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சரிசெய்ய, ஒரகடம் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ரா.முத்து, வைப்பூர். மழைக்கு சேதமான சாலை சீரமைப்பது எப்போது?

காஞ்சிபுரத்தில் இருந்து கோனேரிகுப்பம், ஏனாத்துார் வழியாக சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், தாமல்வார் தெரு வழியாக சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகம் நிறைந்த இத்தெருவில், இரு மாதங்களுக்கு முன் பெய்த மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு, 35 மீட்டர் நீளத்திற்கு ஆங்காங்கே பல்லாங்குழி சாலையாக மாறியுள்ளது.இதனால், சேதமான சாலையில் மழைநீர் தேங்குகிறது. இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி