காஞ்சிபுரம்: புகார் பெட்டி; கட்சி கொடி கம்பத்தால் பஸ் நிறுத்தத்தில் இடையூறு
கட்சி கொடி கம்பத்தால் பஸ் நிறுத்தத்தில் இடையூறு
ஸ்ரீ பெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், வல்லக்கோட்டை பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் பேருந்து மூலம் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின் படி, வல்லக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே இருந்த தி.மு.க., கட்சி கொடி கம்பங்களை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். கொடி கம்பத்தை முழுமையாக தோண்டி அப்புறப்படுத்தாமல், பேருந்து நிறுத்தம் அருகே, சாலையோரம் வைத்துள்ளனர். இதனால், பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணியர் சிரமப்படுகின்றனர். பேருந்து வரும் போது, கொடிகம்பத்தை தாண்டி செல்ல வேண்டி உள்ளது. எனவே, பேருந்து நிறுத்தத்தில் இடையூறாக தரையில் சாய்த்து வைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - மு.செந்தமிழ் செல்வன், வல்லக்கோட்டை.