திருவள்ளூர் : புகார் பெட்டி; திருத்தணி கோவிலில் ஏ.டி.எம்., மையம் அமையுமா?
திருத்தணி கோவிலில் ஏ.டி.எம்., மையம் அமையுமா?
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில்இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.இதையடுத்து, கோவிலில் நடைபெறும் சேவை மற்றும் அபிஷேகத்திற்கு மலைக்கோவிலில் உள்ள கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து டிக்கெட் பெறுகின்றனர். ஆனால், பக்தர்கள் பணமாக கொண்டு சென்றால் தான் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ஏனெனில், கோவில் நிர்வாகம், 'ஜிபே, போன்பே, பேடிஎம்' போன்ற வசதியில்லாததால், பக்தர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்த முடியவில்லை. மேலும், 3 கி.மீ., துாரம் உள்ள திருத்தணி பஜாருக்கு வந்து, பணம் எடுத்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, முருகன் மலைக்கோவிலில் ஏ.டி.எம்., மையம் அமைக்க வேண்டும். எம்.ராஜேஷ், திருத்தணி.
சுடுகாடு பாதைக்கு
மின்விளக்கு பொருத்தப்படுமா?
திருவாலங்காடு ஒன்றியம், முத்துக்கொண்டாபுரம் கிராமத்தில், 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிவாசிகள் இறந்தவர்களை அடக்கம் செய்ய கொசஸ்தலை ஆற்றின் உயர்மட்டபாலம் அருகே சுடுகாடை அமைத்துள்ளனர்.இந்த சுடுகாட்டுக்கு செல்லும் சாலையில் மின் விளக்கு இல்லாததால் இறந்தவர்களை அடக்கம் செய்ய செல்லும் போது அவதியடைகின்றனர்.எனவே, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் இப்பகுதியில் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சரஸ்வதி ரத்தினம், முத்துக்கொண்டாபுரம்.இடிந்து விழும் நிலையில்
நீர்த்தேக்கத் தொட்டி
கும்மிடிப்பூண்டி ஒன்றியம், மாநெல்லுார் ஊராட்சிக்கு உட்பட்டது காந்தி நகர். இந்த தெருவில் உள்ள நுாலகம் அருகில், 1990ம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, தற்போது உறுதியிழந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே வீடுகள், நுாலகம், ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் ஆகியவை உள்ளன.மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்தால், உயிரிழப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. அதற்குள் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றி, புதிதாக கட்டித்தர வேண்டும்.- எஸ். கண்ணுசாமி,மாதர்பாக்கம்.